தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: எஸ்பிஐ மனு தள்ளுபடி @ உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் (மார்ச் 12) சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு மார்ச் 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், “தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை வகைப்படுத்தித் தருவது சிக்கலான நடவடிக்கை. எனவே முழு விவரங்களை வெளியிடுவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும்” என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 4-ம் தேதி எஸ்பிஐ வங்கி மனு தாக்கல் செய்திருந்தது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் எஸ்பிஐ, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்காத நிலையில், அந்த வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே, கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த மனு இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, “இது மிகவும் சுலபமான விஷயம். இது தெரிந்துதான் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவை பிறப்பித்தோம். இது ஒன்றும் புதிய வேலை கிடையாது. வங்கி, இதற்கு முன்பும் இதேபோன்ற வேலைகளை செய்துள்ளது. அப்படி இருக்கும்போது தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?.

பட்டியலை வெளியிடுவது மிகவும் சுலபமான காரியம். விவரங்கள் அனைத்தும் மும்பையில் உள்ள எஸ்பிஐயின் தலைமை அலுவலகத்தில் தான் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, தகவலை திரட்டுவது அவ்வளவு கடினமான விஷயமா என்ன?. ஏற்கனவே சில ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கின்றன. அவர்கள் நீதிமன்றத்தில் அதை சமர்ப்பித்துள்ளனர். அப்படி இருக்கும்போது நீங்கள் மட்டும் கால அவகாசம் கேட்பது ஏன்?.

பட்டியலை வெளியிட நாங்கள் தீர்ப்பு வழங்கி 26 நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?. வங்கி தரப்பில் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம். தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டியது அவசியம்.

இணையதளம் உள்ள இந்த காலகட்டத்தில் தகவலை திரட்டுவது முடியாத காரியமா என்ன?. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை ஒரு வங்கியின் மேலாளர் ஒருவர் மேல்முறையீடு செய்து எதிர்க்கிறார் என்றால்ர் இது மிகவும் தீவிரமான விஷயமாகும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வு எஸ்பிஐ வங்கிக்கு சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டது.

தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ சமர்ப்பிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும்.” என்று கூறினர். மேலும், தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்