தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் மார்ச் 15-ல் சிறப்பு கூட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.

மத்திய கனரக தொழில் துறை செயலராக பணியாற்றி வந்த அருண் கோயல் கடந்த 2022 நவம்பர் 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். சட்ட விதிகளை மீறி அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

2027-ம் ஆண்டு வரை அருண் கோயலின் பதவிக் காலம் உள்ள நிலையில், அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் அவர் ராஜினாமா செய்தது, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும், அருண் கோயலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் மேற்கு வங்கத்துக்கு சென்றிருந்தனர். தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பை அருண் கோயல் புறக்கணித்தார். தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ம் தேதி டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பையும் புறக்கணித்தார்.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடனான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அருண் கோயல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், புதிதாக 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு ஆலோசனை நடத்தி, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வரும் 15-ம் தேதி டெல்லியில் கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தும்.

இக்கூட்டத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் இறுதி செய்யப்படுவார்கள். பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிடுவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE