ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி: பாஜக 6 எம்பி தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு

By என். மகேஷ்குமார்

அமராவதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதான எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் ( டிடிபி ), நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்தது.

இந்நிலையில், பாஜக மேலிடத்தில் இருந்து கடந்த வியாழக் கிழமையன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அழைப்பு வந்தது. அதன் பேரில், இருவரும் தனித் தனியாக டெல்லி சென்றனர்.

அன்றிரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12.10 மணி வரை மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் சந்திர பாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் வெள்ளிக் கிழமையும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் கூட்டணி அமைப்பது உறுதியானது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. ஏற்கெனவே தோழமை கட்சியான ஜனசேனாவுக்கு சந்திரபாபு நாயுடு 24 சட்டப்பேரவை மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கி விட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது பாஜகவும் இக்கூட்டணியில் இணைந்ததால், தெலுங்கு தேசம் கட்சி கண்டிப்பாக 175 தொகுதிகளில் 145 தொகுதிகளில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. மீதமுள்ள 30 தொகுதிகள் இரு தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கியது. மேலும் 8 மக்களவைத் தொகுதிகளையும் ஒதுக்கியதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நடந்த பேச்சு வார்த்தையில், 6 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளதாகவும், ஜனசேனா கட்சி 2 மக்களவை, 25 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இறுதி கட்டமாக நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வீட்டில் 50 நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடந்தது.

அதன் பின்னர், டெல்லியில் இருந்தபடி, சந்திரபாபு நாயுடு தனது கட்சி நிர்வாகிகளிடம் காணொலி மூலம் பேசியதாவது: வரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பாஜக - ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம். இதற்கான தொகுதி பங்கீட்டிலும் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. தோழமை கட்சிகளுக்கு 30 சட்டப்பேரவை மற்றும் 8 மக்களவைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE