‘‘மோடியின் உத்தரவாதம்’’ வேலை செய்வதை வடகிழக்கு மாநில மக்கள் கண்கூடாக பார்க்கின்றனர்: பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ரூ.55,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். குறிப்பாக சேலா சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

வடகிழக்கு மாநிலங்களையும் அவற்றின் எல்லைப் பகுதிகளையும் காங்கிரஸ் கட்சி எப்போதும் புறக்கணித்தே வந்துள்ளது. ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வடகிழக்கு மாநிலங்கள் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியாக இருந்திருந்தால், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், கடைசி கிராமங்கள் என்று பார்த்தன. ஆனால், என்னைப் பொறுத்த வரை அந்த கிராமங்கள்தான் முதல் என்று நினைக்கிறேன். அதனால்தான் ‘துடிப்புள்ள கிராமங்கள்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

மோடியின் உத்தரவாதம் எந்தளவுக்கு வேலை செய்கிறது என்பதை வடகிழக்கு மாநில மக்கள் கண்கூடாக பார்க்கின்றனர். நாட்டின் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் கூட இப்போது வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றால், அதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

கடந்த 2019-ம் ஆண்டு சேலா சுரங்கப் பாதைக்கு நான்தான் அடிக்கல் நாட்டினேன். அந்த திட்டம் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டோன்யி போலோ விமான நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டினேன். இப்போது அந்த விமான நிலையம் எந்தளவுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது என்பது வடகிழக்கு மாநில மக்களுக்கு தெரியும். இவை எல்லாம் மோடியின் உத்தரவாதம் இல்லையா. இவைதான் மோடியின் உத்தரவாதம்.

ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாநிலங்கள், இப்போது தெற்கு ஆசியா மற்றும்கிழக்கு ஆசியாவுடன் இந்தியாவின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிற துறைகளில் உறவை மேம்படுத்தும் பலமான இணைப்பாக உள்ளன. ‘அஷ்ட லட்சுமி’ என்ற நோக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE