‘பிரபலங்களுடன் தொடர்பு’ - கைதான ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்ததாக என்சிபி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB - என்சிபி) அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “ஜாபர் சாதிக் என்ற பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழகம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர்.

போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது.

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக்கை இன்று (மார்ச் 9) கைது செய்துள்ளோம். போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

பின்புலம்: போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்களை, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் பிப்.26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீஸார் கடந்த 23-ம் தேதி நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், விசாரணைக்கு அவர் தலைமறைவு ஆனார். அதன்பின், ஜாபர் சாதிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டுக்கு சீல் வைத்தனர்.

மேலும், ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய அவரது வீட்டில் இருந்த சிசிடிவி தொடர்பான ஹார்ட் டிஸ்க்கையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லி கொண்டு ஆய்வு நடத்தினர். இதில் சினிமா பிரபலங்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முகவர்கள் என பல்வேறு தரப்பினர் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர்களின் பட்டியலை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தயாரித்து வந்தனர்.

இதனிடையே, ஜாபர் சாதிக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்தனர். மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் தற்போது ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

20 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்