சுஷ்மாவின் மகள், பாஜக வழக்கறிஞர்... யார் இந்த பன்சூரி ஸ்வராஜ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

By ஷாலினி

புதுடெல்லி: தேர்தல்களில் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்று புதுமுக வேட்பாளர்கள் குறித்த மக்களின் பார்வை. மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனத்துக்குரிய புதுமுகங்களைப் பற்றி ஒவ்வொருவராகப் பார்ப்போம். அந்த வகையில் இந்த அத்தியாயம் நாம் கவனிக்க இருப்பது, பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ். இவரின் பின்புலம் குறித்து பார்ப்போம்.

சமீப காலமாக பாஜக தனது அடிமட்ட ஊழியர்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு வெகுமதி அளித்து வருவதாக கூறிக் கொள்கிறது. மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் ரமேஷ் பிதுரி போன்றவர்கள் வேட்பாளர்களாக தவிர்க்கப்பட்ட நிலையில், பல புதுமுகங்கள் கட்சிக்குள் நுழைவதில் ஆச்சரியமில்லை. புதுடெல்லி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகிக்குப் பதிலாகப் போட்டியிடுகிறார் மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ். மீனாட்சி லேகி அந்தத் தொகுதி தொடர்பான வேலை விவரங்களை பன்சூரி ஸ்வராஜிடம் ஒப்படைத்துவிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது பாஜக. ஒவ்வொரு தேர்தலுக்கும் பாஜக புதுப் புது முகங்களை அறிமுகம் செய்வது வழக்கம்தான். மொத்தம் 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இதில், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. அதில், புதுடெல்லி தொகுதியில் பன்சூரி ஸ்வராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத் துறை பொறுப்பு வகித்த 2-வது பெண் என்ற பெருமை, மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்ராஜுக்கு கிடைத்தது. இந்தியாவில் ‘மக்களால் அதிகம் விரும்பப்பட்ட அரசியல்வாதி’ என்று அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ‘வால் ஸ்டிரீட்’ சுஷ்மாவுக்கு புகழாரம் சூட்டியதும் நினைவுகூரத்தக்கது.

பன்சூரி ஸ்வராஜ் பின்னணி: தற்போது புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுஷ்மாவின் மகள் பன்சூரி ஸ்வராஜின் பின்புலம் குறித்து பார்ப்போம். 40 வயதான பன்சூரி ஸ்வராஜ், வலுவான சட்டப் பின்னணியைக் கொண்டவர். பன்சூரி ஸ்வராஜ் இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஸ்வராஜ் கௌஷல் ஒரு வழக்கறிஞர் ஆவார். அதோடு, மிசோரம் மாநிலத்தின் முன்னாள் கவர்னராகவும் இருந்திருக்கிறார். பன்சூரி ஸ்வராஜ் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.

பன்சூரிக்கு ஓவியம் வரைவது மற்றும் பயணம் மேற்கொள்வது மிகவும் பிடிக்கும். தாயும், மகளும் தீவிர கிருஷ்ண பக்தர்கள் ஆவார்கள். இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை படித்தார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவர் 2007-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

ஆகஸ்ட் 6, 2019 அன்று, பன்சூரி தனது தாயார் சுஷ்மா ஸ்வராஜை இழந்தார். புதுடெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா மாரடைப்பால் உயிரிழந்தார். வழக்கறிஞர் தொழிலில் 16 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் பன்சூரி. இந்திய உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராகவும் இருக்கிறார். அவர் முக்கியமாக சிவில், கிரிமினல், வணிகம் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளைக் கையாளுகிறார். பன்சூரி துல்லியமாக சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு டெல்லியில் பாஜகவின் சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பன்சூரியின் அரசியல் பாதை வேகம் பெற்றது. டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவராக உருவெடுத்தார். கேஜ்ரிவாலின் கொள்கைகள் மற்றும் நிர்வாக பாணிக்கு எதிரான அவரது வெளிப்படையான நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெல்லி பாஜகவின் தேர்தல் குழு, மத்திய தலைமையிடம் தயாரித்து கொடுத்த வேட்பாளர்கள் பட்டியலில் பன்சூரியின் பெயர் முதலிடத்தில் இருந்தது. இவரின் வெளிப்படையான நிலைப்பாடுதான் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக, பாஜக அவரை முன்மொழிந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடனான அரசியல் மோதலில் பாஜக மேலிடத்தை இவர் அதிகம் கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் அத்மி அடுக்கும் குற்றச்சாட்டுகள்: “பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பியோடிய லலித் மோடிக்காக ஸ்வராஜ் பலமுறை நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். 2012 முதல் 2014 வரை, லலித் மோடிக்கு ஆதரவாக கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை அவர் தொடர்ந்து வாதாடினார்” என்று இவரை ஆம் ஆத்மி குற்றம்சாட்டுகிறது. அதோடு, தனது வழக்கை எதிர்த்துப் போராடியதற்காக பன்சூரி ஸ்வராஜுக்கு லலித் மோடி ட்வீட் மூலம் நன்றி தெரிவித்தும் இங்கே கவனிக்கத்தக்கது.

மணிப்பூர் கலவரம்: மணிப்பூரில் நடந்த வன்முறையின்போது இரண்டு பெண்கள் ஆடைகளை களைந்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் இந்தியாவை உலுக்கியது. அப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் பன்சூரி ஸ்வராஜ். இப்போது எப்படி டெல்லி பெண்களிடம் ஓட்டு கேட்டு வருகிறாராம்?” என்கிறது ஆம் ஆத்மி.

சண்டிகர் மேயர் தேர்தல்: “உச்ச நீதிமன்றத்தால் ஜனநாயகப் படுகொலை என கடுமையாக விமர்சிக்கப்பட்ட சம்பவம்தான் சண்டிகர் மேயர் தேர்தல். அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி உச்ச நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு கண்டனத்துக்குள்ளானார். இந்த சர்ச்சையான சம்பவத்திலும் பாஜகவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர்தான் பன்சூரி ஸ்வராஜ். இதனால் பன்சூரி ஸ்வராஜை வேட்பாளராக அறிவித்ததை பாஜக திரும்பப் பெற வேண்டும்” என்று ஆம் ஆத்மி வலியுறுத்தி வருகிறது.

ஆம் ஆத்மியின் இந்தக் கருத்துகளை எல்லாம் கண்டுகொள்ளாத பன்சூரி ஸ்வராஜ், களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். தாயின் புகழும், தான் அங்கம் வகிக்கும் கட்சியின் செல்வாக்கும் இந்தத் தேர்தல் களத்தில் பன்சூரி ஸ்வராஜுக்கு எந்த வகையில் உறுதுணையாக இருக்கப் போகிறது என்பது விரைவில் புதுடெல்லி தொகுதி வாக்காளர்கள் மூலம் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE