6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாஜகவுடன் கைகோத்த தெலுங்கு தேசம்

By என். மகேஷ்குமார்

6 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆந்திராவில் தொகுதி பங்கீடு குறித்து, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு வரும் ஏப்ரலில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாஜக-வுடன் மீண்டும் 6 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கும் பாஜக மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12.10 நிமிடம் வரை டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன், சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாஜக-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.

தொகுதி பங்கீடு குறித்து இதே கூட்டணி தலைவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் தங்களது பேச்சு வார்த்தையை தொடங்கினர். ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில் ஏற்கனவே 24 சட்டப்பேரவை தொகுதிகள் தனது தோழமை கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு தெலுங்கு தேசம் வழங்கி விட்டது. மேலும், 3 மக்களவைத் தொகுதிகளை ஜனசேனா கட்சிக்கு, தெலுங்கு தேசயம் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த 2014 தேர்தலின் போது, பாஜகவுக்கு, தெலுங்கு தேசம் ஆந்திராவில் 4 எம்பி, மற்றும் 13 எம்.எல்.ஏ தொகுதிகளை ஒதுக்கியது. இதில், 2 எம்பி மற்றும் 4 எம்.எல்.ஏ தொகுதிகளை மட்டுமே பாஜக வென்றது. ஆயினும் தெலுங்கு தேசம் - பாஜக - கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடந்த பாஜகவுடனான தொகுதி பங்கீட்டின் போது, பாஜக இம்முறை 7 எம்பி மற்றும் 10 எம்.எல்.ஏ தொகுதிகளை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது கூட்டணியில் ஜனசேனாவும் உள்ளதால், அக்கட்சிக்கு ஏற்கனவே 3 எம்பி மற்றும் 24 எம்.எல்.ஏ தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக கேட்ட தொகுதிகளை ஒதுக்க முடியாமல் உள்ள சூழலை விளக்கி உள்ளார்.

இந்நிலையில், நேற்று நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின் போது பாஜக, இறுதியாக 9 சட்டப்பேரவை மற்றும் 5 மக்களவைத் தொகுதிகளை கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், காளஹஸ்தி, ஜம்மலமடுகு, கைகலூரு, தர்மாவரம், வடக்கு விசாகப்பட்டினம், அரக்கு மற்றும் மத்திய விஜயவாடா ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளையும், திருப்பதி, ராஜம்பேட்டை, ராஜமுந்திரி, நரசாபுரம், அரக்கு ஆகிய மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கேட்கிறது.

ஏறக்குறைய பேச்சு வார்த்தை நடந்து முடிந்த நிலையில், நேற்று மாலை, டெல்லியில் இருந்து சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் உள்ள 12 தொகுதிகளை சேர்ந்த தமது கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் பேசி உள்ளார். கூட்டணி கட்சிகளுக்காக நாம் சில தொகுதிகளை இழக்க வேண்டி வரும்.

அப்படி நடந்தால், அந்த தொகுதிகளை சேர்ந்த தமது கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை இழக்க கூடாது. தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைந்ததும், கண்டிப்பாக தொகுதிகளை விட்டு கொடுத்த நிர்வாகிகளுக்கு தக்க நன்மை செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஆதலால் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உருவாகி உள்ளது.
இதனால், ஆந்திராவை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE