ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை டெல்லி முதல்வரும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து தேர்தல் தேதி மார்ச் 13-ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: டெல்லி மக்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அவர்களுக்கு சேவை செய்ய அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன். `மக்களவையில் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி எம்.பி.க்கள்) இருந்தால் டெல்லி இன்னும் வளமையாக இருக்கும்` என்ற ஸ்லோகத்துடன் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம்.

தற்போது டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த 2 மாநிலங்களில் மட்டும்தான் இலவச மின்சாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய திட்டங்களை டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் தடுத்து நிறுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு எத்தனையோ முயற்சிகளை செய்தது.

ஆனால் அது அந்த முயற்சிகள் பலிக்கவில்லை. கடந்த தேர்தலில் நாம் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டோம். எனவே, இந்த முறை டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற மக்கள் உதவவேண்டும். இதன்மூலம் மக்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் கரம் வலுப்படும்.

டெல்லி மாநில அரசின் அதிகாரத்தில் சாதாரண மனிதனான என்னை நீங்கள் (மக்கள்) அமர வைத்து விட்டீர்கள் என்று மக்களாகிய உங்களை பாஜகவினர் வெறுக்கின்றனர். ஆம் ஆத்மி தொடங்கிய மொஹல்லா கிளினிக்குகளை புல்டோசர்கள் கொண்டு இடித்தனர்.

மேலும் ஆம் ஆத்மி தொடங்கிய வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம், வீட்டுக்கே வந்து மருத்துவச் சோதனை, மருந்துகளை வழங்கும் திட்டத்தையும் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்தத் திட்டங்களை நாம் சிறப்பாக அமல்படுத்தி வெற்றி கண்டோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE