சென்னையை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி உட்பட 23 பேருக்கு தேசிய படைப்பாளி விருது: பிரதமர் மோடி வழங்கினார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 23 பேருக்கு தேசிய படைப்பாளி விருதினை பிரதமர் மோடி வழங்கினார்.

மத்திய அரசு சார்பில் அண்மையில் தேசிய படைப்பாளி விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதுக்காக கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நாடு முழுவதும் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. மொத்தம் 1.5 லட்சம் பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவர்கள் தொடர்பாக ஆன்லைன் வாயிலாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டன. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கருத்துகளை பதிவு செய்தனர். இவற்றின்அடிப்படையில் 200 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில்இருந்து 23 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 23 பேருக்கும் தேசிய படைப்பாளி விருதினை பிரதமர் மோடி வழங்கினார். இதில் சிறந்த கதை சொல்லி பிரிவுக்கான விருதுசென்னையை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது. தற்போது அவர் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் வசிக்கிறார். ‘கீர்த்தி ஹிஸ்டரி'என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வரலாறு தொடர்பாகவும் பல்வேறு சமூக விவகாரங்கள் தொடர்பாகவும் ஆங்கிலத்தில் அவர் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். மேலும் சிறந்த நானோபடைப்பாளி – பியூஷ் புரோஹித், சிறப்பு கேமிங் படைப்பாளி – நிஷ்சய் உட்பட மொத்தம் 23 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஒரு காலத்தில் உணவகங்களில் சுவையான உணவுகள் கிடைக்கும் என்று எழுதப்பட்டிருக்கும். தற்போது, சத்தான உணவு வகைகள் கிடைக்கும் என்று எழுதப்படுகிறது. உங்களைப் போன்ற படைப்பாளிகளால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் இந்தியபெண்கள் தொடர்பாக எதிர்மறையான சிந்தனைகள் உள்ளன. இந்திய பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை, வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர் என்று பெரும்பாலான மேற்கத்திய மக்கள் கருதுகின்றனர். இதுபோன்ற தவறான எண்ணங்களை உடைத்தெறிய வேண்டும்.

உடல்நலம் மட்டுமன்றி மனநலனை பேணுவதிலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும். இந்தியர்களின் மனநலனை மேம்படுத்துவதில் படைப்பாளிகள் ஆக்கப்பூர்வமான பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவரது உரையில் நகைச்சுவை ததும்பியது. சிறந்த கலாச்சார தூதர் பிரிவில் விருது பெற்ற மைதிலிதாக்குருக்கு விருது வழங்கிய போது பிரதமர் மோடியின் நகைச்சுவையால் அரங்கம் அதிர்ந்தது.

“என்னுடைய உரையை கேட்டுகேட்டு மக்கள் அலுத்துபோய்விட்டனர். பார்வையாளர்களுக்காக நீங்கள் ஒரு பாட்டு பாட முடியுமா" என்று பிரதமர் கோரினார். இதற்கு மறுப்பு தெரிவிக்காத மைதிலி "சரி, நான் பாடுகிறேன்" என்றார்.

உடனே அடுத்த கேள்வியை பிரதமர் தொடுத்தார். "அப்படிஎன்றால் எனது பேச்சு அலுப்பாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா" என்று அவர் கேள்வி எழுப்பினார். இதை புன்னகையுடன் மைதிலி மறுத்தார்.

கொனார்க்கில் ‘பேஷன் பெண்’: பாரம்பரிய பேஷன் படைப்பாளிவிருதை வென்ற ஜான்வி சிங்குடன்பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் பேசும்போது, “கொனார்க் கோயிலில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒரு இளம்பெண் மினி ஸ்கர்ட் அணிந்து கையில் பர்ஸ் வைத்திருக்கும் சிலையும் உள்ளது. இதன்மூலம் பழங்காலத்திலேயே இந்தியாவில் ஆடை பேஷன் பிரபலமாக இருந்திருக்கிறது. சிற்பிக்கு கூட பேஷன் குறித்த அறிவு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE