நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.100 குறைத்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்தஓராண்டுக்கும் மேலாக மாற்றப்படாமல் உள்ளது.

எரிவாயு சிலிண்டரை பொருத்தவரை, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மட்டும் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், நாடுமுழுவதும் 19 கிலோ எடை கொண்டவணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் 1-ம் தேதிரூ.19 உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என்று பிரதமர் மோடிஅறிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி, எக்ஸ் வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:

மகளிர் தினத்தை முன்னிட்டு, எல்பிஜி (வீட்டு உபயோகத்துக்கான) சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, நாடு முழுவதும் பல லட்சம் மக்களின் குடும்ப நிதிச் சுமையை பெருமளவு குறைக்கும். குறிப்பாக, பெண் சக்திக்கு வலிமை தரும்.

சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையைஉருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம்.

பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களது வாக்குறுதிக்கு ஏற்பவும், பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விலை ரூ.818.50 ஆக குறையும்: இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவரைரூ.918.50-க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818.50-க்கு விற்கப்படும். சிலிண்டர் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் பண்டிகையின்போது, வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துபிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே, மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE