‘ஆந்திராவில் நடப்பது பாஜக ஆட்சிதான்’ - ஒய்எஸ் ஷர்மிளா குற்றச்சாட்டு

By என். மகேஷ்குமார்


“ஆந்திராவில் பாஜகவுக்கு ஒரு எம்பி, எம்எல்ஏ கூட கிடையாது. ஆயினும் இங்கு பாஜக ஆட்சிதான் நடக்கிறது” என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.

அமராவதியில் உள்ள மங்களகிரியில் அமைந்துள்ள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் மாநிலதலைவர் ஒய்எஸ் ஷர்மிளா கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பேசுகையில், “ஆந்திர மாநில வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து மிக மிக முக்கியம்.

தாய் போன்ற தனது மாநிலத்தின் முதுகில் குத்தி உள்ளார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்காக போராட்டம் செய்துள்ளார். ஆனால், இவர் முதல்வரான பின்னர் ஒருமுறை கூட இது குறித்து எங்குமே வாய் திறக்கவில்லை.

மாநில அந்தஸ்து என்பது நமது உரிமை. அது மட்டும் வந்திருந்தால் நாம் இம்மாநிலத்திற்கு தலைநகரம், போலாவரம் அணைக்கட்டு போன்றவற்றை கட்டி முடித்திருப்போம். நம் பிள்ளைகள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டிய நிலை வந்திருக்காது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், முதல் கையெழுத்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோப்பில்தான் என ராகுல் காந்தி எனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்.

மாநில பிரிவினை நடந்த பின்னர், 5 ஆண்டுகள் வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக ஆட்சி புரிந்தார். அப்போது அவர் மத்தியில் ஆட்சி புரிந்த பாஜகவுடன் கூட்டணியில் இருந்தார். அவரும் மாநில சிறப்பு அந்தஸ்தை பெறவில்லை. அதன் பின்னர், என்அண்ணன் ஜெகன் 5 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார்.

அவரும் சிறப்பு அந்தஸ்து குறித்து பேச்சே எடுக்கவில்லை. இந்த இருவரும் பாஜகவுக்கு துணைபோகவே நேரம் சரியாக இருந்தது. இப்போது கூட ஆந்திராவில் பாஜகவுக்கென ஒரு எம்பியோ அல்லது ஒரு எம்எல்ஏவோ கூட இல்லை. ஆனாலும், இப்போது பாஜகவின் சொல்படிதான் ஆந்திராவில் ஆட்சி நடக்கிறது” என ஷர்மிளா குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE