கூட்டணி குறித்து பாஜக - பிஜு ஜனதா தளம் ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

By செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: காங்கிரஸை எதிர்த்து ஒடிஷாவில் துவக்கப்பட்ட கட்சி பிஜு ஜனதா தளம். அக்கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், அம்மாநிலத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியமைத்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஒடிஷா மாநில முதல்வராக அவர் இருந்துவருகிறார்.

முதல்வர் பதவியை ஏற்பதற்கு முன்பாக, 2000-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நவீன் பட்நாயக் மத்திய அமைச்சராக இருந்தவர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிஜு ஜனதா தளம், 2009-ம் ஆண்டு அக்கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றது. அம்மாநிலத்தில் 2000-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜூ ஜனதாதளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனினும், 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன், ஒடிசா சட்டப்பேரவைக்கும் நடந்த தேர்தலில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

ஒடிசாவில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்ததால் பாஜகவுடனான கூட்டணியை பிஜூ ஜனதாதளம் முறித்துக் கொண்டது. அந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜூ ஜனதாதளம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த தேர்தல்களில், நவீன் பட்நாயக் இதுவரை இல்லாத அளவில் வெற்றி வகை சூடினார். 21 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில், 2019 தேர்தலில் 12 தொகுதிகளை பிஜு ஜனதா தளம் கைப்பற்ற எட்டு இடங்களிலும் பாஜகவும், ஓர் இடத்தில் காங்கிரஸும் வென்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்தபிறகு காங்கிரஸ் கட்சியையும், பாஜகவையும் ஒருசேர எதிர்ப்பது என்ற அரசியல் நிலைப்பாட்டை கடைப்பிடித்து மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக பாஜகவுடன் தேர்தல் கூட்டணி இல்லாமல், மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு மட்டும் தங்கள் எம்பிக்கள் மூலம் ஆதரவு அளித்து வருகிறது பிஜு ஜனதா தளம்.

மத்தியில் இந்த நிலைப்பாட்டை இரு கட்சிகளும் கடைபிடித்தாலும் ஒடிஷாவை பொறுத்தவரை இருகட்சிகளுக்கும் சுமுகமான உறவு இல்லை. 2000-த்தில் இருந்து தொடர்ச்சியாக வென்று, ஒடிஷாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் பிஜு ஜனதா தளத்தை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீப ஆண்டுகளில் நவீன் பட்நாயக்கை கடுமையாக எதிர்த்தும் வந்தது.

15 வருடங்களுக்கு பின் கூட்டணி?: இந்நிலையில் திடீர் திருப்பமாக, 15 வருடங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன் பட்நாயக்கின் அதிகாரப்பூர்வ இல்லமான நவீன் நிவாஸில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டம் இந்த கூட்டணி பேச்சுக்கள் எழ அச்சாரமிட்டுள்ளன. பிஜு ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்கள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிஜேடி துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தேபி பிரசாத் மிஸ்ரா, "பிஜு ஜனதா தளம் ஒடிஷா மக்களின் அதிக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும். ஆம், இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள் நடந்தன." என்று உறுதிப்படுத்தினார். அதேபோல், பிஜு ஜனதா தளம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் குறித்து பிஜேடி தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

2036ம் ஆண்டு ஒடிசா மாநிலமாக உதயமாகி 100 ஆண்டுகள் நிறைவடையும். அதற்குள் அடைய வேண்டிய முக்கிய மைல்கற்கள் உள்ளன. எனவே ஒடிசா மக்களின் அதிக நலன்களுக்காக பிஜு ஜனதா தளம் இதை நோக்கி அனைத்தையும் செய்யும்" என்று தெரிவிக்கப்பட்டது.

பிஜு ஜனதா தள ஆலோசனை கூட்டம் நடத்திய அதேவேளையில் ஒடிஷா பாஜக தலைவர்கள் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்திலும் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் அக்கட்சி எம்பி ஜுவல் ஓரம். அதில், "ஆமாம், பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது குறித்த விவாதங்கள் நடந்தன. கட்சியின் தேசிய தலைமை இறுதி முடிவை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

இரு கட்சித் தலைவர்களும் சமீபத்திய பொதுக்கூட்டங்களில் ஒருவருக்கொருவர் புகழ்ந்துகொண்டு பேசிய செய்திகள் வட்டமடித்த நிலையில் தற்போது கூட்டணி குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்