காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அர்ஜுன் மோத்வாடியா, அம்ப்ரிஷ் டெர் பாஜகவில் ஐக்கியம்

By செய்திப்பிரிவு

காந்திநகர்: குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அர்ஜுன் மோத்வாடியா, அம்ப்ரிஷ் டெர் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், போர்பந்தர் தொகுதி எம்எல்ஏவுமான அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுான அம்ப்ரிஷ் டெர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். தலைநகர் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

அம்ப்ரிஷ் டெர் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய அர்ஜுன் மோத்வாடியா நேற்று விலகினார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததையும், காங்கிரஸ் தலைவர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லாததையும் காரணம் காட்டி இருவரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அர்ஜுன் மோத்வாடியா நேற்று எழுதிய கடிதத்தில், "அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது இல்லை என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்தபோது நான் எனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தேன். அதை தாங்கள் அறிவீர்கள். ராமர் இந்துக்களின் வழிபடும் கடவுள் மட்டுமல்ல; அவர் நமது நாட்டின் ஆன்மாவாக இருக்கிறார். பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது இல்லை என்ற முடிவின் மூலம் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது.

அதோடு, மக்களின் உணர்வுகளை கணிப்பதில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. அயோத்தி ராம ஜென்ம பூமி பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்காததன் மூலம் காங்கிரஸ் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது என நான் சந்தித்த பலரும் குற்றம் சாட்டினார்கள். பிராண பிரதிஷ்டை நடந்த சமயத்தில், அசாமில் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டது மக்களை மேலும் காயப்படுத்துவதாக இருந்தது” என குறிப்பிட்டிருந்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்பரிஷ் தெர் மற்றும் அர்ஜுன் மோத்வாடியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE