எனக்கு குடும்பம் இல்லை எனக் கூறுவதில் என்ன கருத்தியல் இருக்கிறது?- எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி

By செய்திப்பிரிவு

சங்காரெட்டி(தெலங்கானா): “எனக்கு குடும்பம் இல்லை எனக் கூறுவதில் என்ன கருத்தியல் இருக்கிறது” என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலங்கானாவின் சங்காரெட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “தெலங்கானா மக்களிடம் உத்வேகம் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன். எனது நம்பிக்கையை இது அதிகரிக்கச் செய்கிறது. தெலங்கானாவின் வளர்ச்சிக்கான உங்களின் ஏக்கத்தை நான் பார்க்கிறேன்.

நீங்கள் காட்டும் அன்பையும் பாசத்தையும் நான் இரட்டிப்பாக்கித் தருவேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம். இந்தியா புதிய உச்சத்தை எவ்வாறு அடைந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த உலகிற்கும் இந்தியா நம்பிக்கை கீற்றாக இருக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில், உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை நாம் உருவாக்குவோம். இது நான் அளிக்கும் வாக்குறுதி. ஜம்மு காஷ்மீரில் இருந்த விசேஷ சட்டப்பிரிவான 370 நீக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. பாஜக அதனை நிறைவேற்றி இருக்கிறது. பாஜக ஆற்றிய மிகப் பெரிய பணி இது. இது குறித்த ஆர்டிக்கள் 370 திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவது இது முதல்முறை. படக்குழுவினருக்கு எனது நன்றி. இதுபோல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என நாங்கள் வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இது உங்களுக்கு பெருமிதம் தருகிறதா இல்லையா?

குடும்ப ஆட்சி முறை ஜனநாயகத்துக்கு எதிரானது. திறமை மிக்கவர்கள் மேலெழ அது அனுமதிக்காது. எனக்கு குடும்பம் இல்லை என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். கொள்ளையடிப்பதற்கு அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறதா? பல மாநிலங்களில் முதல்வர்களின் குடும்பத்தினர் உயர் பொறுப்புகளில் இருப்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதுதான் ஜனநாயகமா? மோடியின் சித்தாந்தத்துக்கு எதிராக தாங்கள் களத்தில் நிற்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள். அவர்கள்தான் எனக்கு குடும்பம் இல்லை என கூறுகிறார்கள். இதுதான் கருத்தியல் மோதலா? குடும்பம்தான் முதலில் என்பதுதான் அவர்களின் கருத்தியல். நாடுதான் முதலில் என்பதுதான் மோடியின் கருத்தியல். அவர்களுக்கு குடும்பம்தான் எல்லாம். எனக்கு நாடுதான் எல்லாம். குடும்பத்தின் நலனுக்காக அவர்கள் நாட்டை தியாகம் செய்கிறார்கள். நாட்டின் நலனுக்காக நான் என்னை தியாகம் செய்கிறேன்.

அரசாங்கத்திடம் இருந்து நான் பெறும் மாத ஊதியத்தில், சிலவற்றை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுக்கு நன்கொடையாக வழங்குகிறேன். குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே விலை உயர்ந்த பரிசுகளை வாங்கிக்கொள்கின்றனர். அந்த பரிசுகள் மூலம் அவர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நான் இன்றுவரை எனக்கு வழங்கப்படும் அனைத்து பரிசுகளையும் தோஷகானாவில் டெபாசிட் செய்துள்ளேன். அது ஏலம் விடப்படுகிறது. அவ்வாறு ஏலம் விடப்படுவதன் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் அன்னை கங்கையின் சேவைக்காக செலவிடப்படுகிறது.

குடும்ப ஆட்சி நடத்துபவர்கள், தங்கள் கறுப்புப் பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளைத் திறக்கிறார்கள். ஆனால் நான், ஏழைகள் ஜன்தன் கணக்குகளைத் தொடங்கி அவர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறேன். குடும்ப ஆட்சி நடத்துபவர்கள், ஆடம்பரமான மாளிகைகளில் வாழுகிறார்கள். நான், ஏழைகள் சொந்த வீடுகளில் உறங்குவதை உறுதி செய்கிறேன். குடும்ப அரசியல் செய்பவர்கள் நாட்டின் வளத்தை விற்று தங்கள் குழந்தைகளை உயர்த்துகிறார்கள். நான், உங்கள் குழந்தைகளின் கனவை நனவாக்க உழைத்துக்கொண்டிருக்கிறேன். 140 கோடி இந்தியர்கள்தான் என் குடும்பம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE