ரேபரேலியில் காங்கிரஸுக்கு காத்திருக்கும் சவால்கள்

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒரு காலத்தில் அந்த மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸுக்கு தற்போது ஒரு மக்களவைத் தொகுதி (ரேபரேலி) மட்டுமே கைவசம் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதியே மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் ஸ்மிருதியை எதிர்த்து ராகுல் களமிறங்குவாரா என்பது இதுவரை தெரியவில்லை.

குறையும் வாக்கு சதவீதம்: கடந்த 2019 மக்களவைத் தேர் தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார். ஐந்து முறை இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அவர், வயது முதுமை காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

ராஜஸ்தானில் இருந்து அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சோனியாவுக்கு பதிலாக அவரது மகள் பிரியங்கா காந்தி ரேபரேலியில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொகுதியில் காங்கிரஸுக்கு பல்வேறு சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:ரேபரேலி மக்களவைத் தொகுதிக்குள் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.

சமாஜ்வாதி 4 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 13.2சதவீதம், சமாஜ்வாதிக்கு 37.6 சதவீதம், பாஜகவுக்கு 29.8 சதவீத வாக்குகள் கிடைத்தன. சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது.

அணி மாறும் தலைவர்கள்: வரும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த சூழலில் ரேபரேலியை சேர்ந்த சமாஜ்வாதியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் பாண்டே சில நாட்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து விலகினார். அவர்விரைவில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்று தெரிகிறது. இதன்காரணமாக ரேபரேலி மக்களவைத் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி வாக்குகள் பாஜகவுக்கு மடை மாறும் வாய்ப்பிருக்கிறது.

ரேபரேலி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக ரவீந்திர சிங் என்பவர் பதவி வகித்தார். அண்மையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அவரோடு சேர்ந்த ரேபரேலி மாவட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அனைவரும் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

இது காங்கிரஸுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. ரேபரேலி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அதிதி சிங் கடந்த 2021-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் அவர் மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவருக்கு எதிராக பாஜகசார்பில் அதிதி சிங் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. பிரியங்காவுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பியதன் காரணமாகவே அதிதி சிங் காங்கிரஸில் ஓரம் கட்டப்பட்டார். ரேபரேலி மண்ணின் மகளாக போற்றப்படும் அவர், அந்த தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.

அயோத்தி ராமர் கோயில்: ரேபரேலி மக்களவைத் தொகுதி வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவர். 5 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். இதர மதத்தினர் 5 சதவீதம் பேர் உள்ளனர். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டிருப்பதால் இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இது பாஜகவுக்கு சாதகமான அலையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்