உ.பி.யில் முஸ்லிம் அதிகமுள்ள தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டி

By ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் அசதுத்தீன் ஒவைசியின் கட்சி போட்டியிடுகிறது. ஹைதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் (அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின்) கட்சி, கடந்த பல ஆண்டுகளாக வட மாநில தேர்தல்களிலும் போட்டியிட்டு அங்கு கால்பதிக்க முயன்று வருகிறது. இக்கட்சி வரும் மக்களவைத் தேர்தலிலும் சுமார் 30 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

உ.பி.யில் சுமார் 25 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். மேலும், சுமார் 20 தொகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் 10 தொகுதிகளில் பிஎஸ்பி வென்றது. இவை பெரும்பாலும் முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகள் ஆகும்.

உ.பி.யில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிஎஸ்பி ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம், முஸ்லிம் வாக்குகளை பிரித்ததே தவிர ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இந்த இரண்டு கட்சிகளாலும் சில ஆயிரம் வாக்குகள் பிரிந்ததால் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணிக்காக ஒவைசி பேச்சு நடத்துவதாகத் தெரிகிறது. இதில், முஸ்லிம்கள் அதிகமுள்ள 5 தொகுதிகளை ஒவைசி கேட்டு வருகிறார். இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் தனித்துத் போட்டியிட அவரது கட்சி தயாராகி வருகிறது.
உ.பி.யில் கூட்டணி அமைத்து அல்லது தனித்துப் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் முடிவால் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE