புற்றுநோய் பாதித்த ஐந்தே நாளில் மீண்டும் பணி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகிர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நாளில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்க்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சோம்நாத்தே உறுதிப்படுத்தியுள்ளார்.

தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சோம்நாத் கூறுகையில், "சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படும் போது எனக்கு உடல்நலக் குறைவு பிரச்சினை இருந்தது. வயிற்றில் வலி இருந்தது. புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. எனினும், அந்த நேரத்தில் நோய் தாக்குதல் குறித்து தெளிவாகத் தெரியவும் இல்லை. அதைப் பற்றிய தெளிவான புரிதலும் எனக்கு இல்லை.

எனினும், செப்டம்பர் 2, 2023 அன்று ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட அன்று வயிற்று வலிக்கு ஸ்கேன் செய்தபோது எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இரைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இச்செய்தி எனக்கும், எனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி என்னுடைய சக பணியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட பின் அடுத்த நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். கீமோதெரபி சிகிச்சை மூலம் இரைப்பையில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஐந்தாவது நாள் வலியின்றி இஸ்ரோவுக்கு மீண்டும் பணிக்கு திரும்பினேன். தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE