பெங்களூரு குண்டுவெடிப்பு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே' என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் முழுக்க என்ஐஏ அதிகாரிகள் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாதிரிகளை சேகரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் என்ஐஏவிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளது.

முன்னதாக வெடிவிபத்து குறித்துப் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, "நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். 8 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் வெவ்வேறு திசைகளில் செயல்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. பல சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளோம். பொறாமை காரணி உள்ளதா என்பது உட்பட ஒவ்வொரு கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த தருணத்தில் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதை அரசியல் பிரச்சனையாக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். மங்களூரு குண்டுவெடிப்புக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது. பாஜக எதிர்மறையான அறிக்கைகளை வெளியிடக்கூடாது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE