எல்லையோர காவல் படையில் இந்தியாவின் முதல் ஸ்னைபர் வீராங்கனை: ‘பயிற்றுவிப்பாளர் கிரேட்’-ல் தேர்வாகி சாதனை

By செய்திப்பிரிவு

இந்தூர்: இந்தியாவின் எல்லையோரங்களைப் பாதுகாக்கும் பிரத்யேக துணை ராணுவப் படையான எல்லையோர காவல் படையில் (பிஎஸ்எப்) பல பிரிவுகள் உள்ளன.அவற்றுள் ஒன்று ஸ்னைபர் எனப்படும் தொலை குறி துப்பாக்கிச் சுடுதல் பிரிவு.

தொலைவில் உள்ள எதிரியையோ, எதிரி முகாமையோ மறைந்திருந்து துல்லியமாகக் குறிவைத்துச் சுடும் பயிற்சி பெற்றவர்கள் இப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள். இதுவரை ஆண்கள் மட்டுமே இந்த ஸ்னைபர் பிரிவில் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், இமாச்சல பிரதேசம் மண்டி மாவட்டத்தை சேர்ந்த சுமன் குமாரி எல்லையோர காவல் படையின் பஞ்சாப் படைப்பிரிவில் தளபதியாக 2021-ம் ஆண்டில் தேர்வானார்.

தந்தை எலக்ட்ரீஷியன், தாய் இல்லத்தரசி எனஎளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த சுமன் குமாரி பிஎஸ்எப்-ல் சேர்ந்ததே அப்போது சாதனையாகக் கருதப்பட்டது. பின்னர் உயரதிகாரிகளின் அனுமதி பெற்று விடாமுயற்சி, கடின பயிற்சியின் பலனாக நாட்டின் முதல் பெண்ஸ்னைபராக தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து இந்தூர் மத்திய ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாய பள்ளி ஐஜி பாஸ்கர் சிங் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஸ்னைபர் பயிற்சி பிரிவில் மொத்தம் 56 பேர் பங்கேற்றனர். அவர்களுள் ஒரே பெண் சுமன் குமாரி மட்டுமே.இதில் ‘பயிற்றுவிப்பாளர் கிரேட்’என்பதற்கான தனி தேர்வு நடத்தப்படுகிறது. கமாண்டோ பயிற்சிக்கு அடுத்தபடியாக மிகக்கடினமான பயிற்சி ‘பயிற்றுவிப்பாளர் கிரேட்’தான். இதில் சுமன் சாதனை படைத்துள்ளார். பிஎஸ்எப்-ன்முதல் ஸ்னைபர் பெண் இவரே. மேலும் பல பெண்கள் ஸ்னைபராக இவர் உந்துசக்தியாக இருப்பார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE