‘ஆல் தி பெஸ்ட்’ - என்டிஏவில்  நீடிப்பேன் என்ற பிஹார் முதல்வர் பேச்சுக்கு தேஜஸ்வி  எதிர்வினை

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடிக்கடி அணி மாறுவதைச் சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், "நிதிஷ் குமார் அவரது வார்த்தைகளில் உறுதியாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் அவரை (நிதிஷ் குமார்) வாழ்த்துகிறோம். இந்த முறை அவர் இப்போது இருக்கும் இடத்திலேயே (என்டிஏ) நீடிப்பேன் என்று கூறியுள்ளார். இந்தமுறையாவது அவரது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்ததற்குப் பின்னர், சனிக்கிழமை இனி என்டிஏ கூட்டணியில் நீடிப்பேன் என பிரதமருக்கு பிஹார் முதல்வர் உறுதி அளித்திருந்தார்.

அவர் கூறுகையில், "நீங்கள் (பிரதமர் மோடி) முன்பு பிஹாருக்கு வந்திருந்தீர்கள். அப்போது நான் சில காலம் என்டிஏவில் இருந்து மறைந்திருந்தேன். இப்போது நான் மீண்டும் உங்களுடன் இணைந்துள்ளேன். இனி எப்போதும் என்டிஏவிலேயே நீடிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக ஆதரவுடன் பிஹாரின் முதல்வராக 9-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டில் இரண்டாவது முறையாக நிதிஷ் குமார் அணி மாறி முதல்வராக பதவி ஏற்றார். கடந்த பத்து ஆண்டுகளில் 5 முறை நிதிஷ் அணி மாறி முதல்வராக நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவின் ‘ஜங்கில் ராஜ்’-க்கு எதிராக பிரச்சாரம் செய்து முதல் முறையாக பிஹாரின் முதல்வரானார். அதிலிருந்து 8 முறை பிஹாரின் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

பின்னர், 2013ம் ஆண்டு, நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 17 ஆண்டு கால பாஜக நட்பை முறித்துக்கொண்டு என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2015-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்தார். பின்பு ஆர்ஜேடி மீது ஊழல் மற்றும் அரசைத் திணறடிப்பதாக குற்றம்சாட்டி 2017 -ல் மெகா கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2022-ல் தனது ஆட்சியைக் கலைக்க பாஜக சதி செய்வதாகவும், தனது ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்களை தனக்கு எதிராக திருப்ப முயற்சிப்பதாக குற்றம்சாட்டி மீண்டும் பாஜகவின் உறவினை முறித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE