மணிப்பூர் ஆயுதக் கொள்ளை வழக்கில் 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது, பிஷ்ணுபூர் காவல்நிலைய ஆயுத கிடங்கில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

அசாமின் குவாஹத்தியில் உள்ள கம்ரூப்பின் (மெட்ரோ) தலைமை ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமீபத்தில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. சிபிஐ-ன் குற்றப்பத்திரிகையில், லைஷ்ராம் பிரேம் சிங், குமுசம் திரன் என்கிற தப்கா, மொய்ரங்தேம் ஆனந்த் சிங், அதோக்பம் கஜித் என்கிற கிஷோர்ஜித், லவுக்ரக்பம் மைக்கேல் மங்காங்சா என்கிற மைக்கேல், கோந்தவுஜம் ரோமோஜித் மைத்தேயி, ஜான்சன் என்ற ஜான்சன் ஆகியோர் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.

முன்னதாக, பிஷ்ணுபூரில் உள்ள மொய்ராங் காவல் நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுதக் கொள்ளை வழக்கை கடந்த 2023, ஆக.24ம் தேதி சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது கலவரக்கும்பல் ஒன்று பிஷ்ணுபூரின் நரன்செய்னாவில் உள்ள இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் தலைமையகத்தின் இரண்டு அறைகளில் இருந்து 300 துப்பாக்கிகள், 19,800 தோட்டாக்கள் மற்றும் இதர பிற ஆயுதங்களையும் கடந்த ஆண்டு ஆக.3ம் தேதி கொள்ளையடித்துச் சென்றது.

மத்திய புலனாய்வு முகமை மணிப்பூர் கலவரம் தொடர்பாக 27 வழக்குகளை விசாரித்து வருகிறது. இதில் 17 வழக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்புடையது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 200பேர் உயிரிழந்துள்ளனர். 50,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE