பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெடிகுண்டு வைத்த நபர் அடையாளம் காணப்பட்டார்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டில் 500-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில், இங்கு நேற்றுமுன்தினம் பிற்பகலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் உணவகபணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஒயிட் ஃபீல்ட் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்புப் படை அதிகாரிகள் ஆகியோரும் தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்ற‌னர். தேசியபுலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் ஆகியோர் குண்டுவெடித்த உணவகத்துக்கு சென்றுஆய்வு செய்தனர். பின்னர் சித்தராமையாஉள்துறை அமைச்சர் பரமேஷ்வர்,தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இந்த சம்பவம் குறித்துஅவசர ஆலோசனை நடத்தினார்.

பேருந்தில் வந்த மர்ம நபர்: முதல்வர் சித்தராமையா கூறும்போது, ''விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலை 11.45 மணிக்கு வெள்ளை டி ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்த நபர் மாநகராட்சி பேருந்தில் உணவகத்துக்கு அருகே வந்து இறங்குகிறார். அவர் தொப்பி, முகக் கவசம், கண்ணாடி ஆகியவற்றை அணிந்துள்ளார்.

12.35 மணியளவில் உணவகத்தில் ரவா இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளார். தான் கொண்டுவந்த பையை மேஜைக்குஅடியில் வைத்துவிட்டு வெளியேறுகிறார். அடுத்த சில நிமிடங்களில் பயங்கரசத்தத்துடன் குண்டுவெடித்து சிதறியது.அவரது முகத்தை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடிவமைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இந்த விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். இதனை பாஜகவினர் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்க்கின்றனர்'' என்றார்.

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறும்போது, ''இந்த குண்டுவெடிப்பு வழ‌க்கு மத்தியகுற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நன்கு பயிற்சி பெற்றவர் மூலமாக இந்த சதி செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

சக்தி குறைந்த வெடிகுண்டாக இருப்பினும், டிஜிட்டல் டைமர் கருவி மூலம்இயக்கி வெடிக்கப்பட்டுள்ளது. டிபன்பாக்ஸ் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் பல்ப் இழை டெட்டனேட்டராகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் ஹூப்ளி, தார்வாட், பெங்களூரு ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

தொழில் போட்டி காரணமா? கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறும்போது, ''இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூருவாசிகளிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது. தீவிரவாதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்பட்டதால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே உணவகம் மாதந் தோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதால், தொழில் ரீதியாக‌ ஏராளமான எதிரிகள் இருந்துள்ளனர். எனவே தொழில் போட்டி காரணமாக இந்த சதி செயல் நடந்தததா? என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் களில் ஒருவரான திவ்யா ராகவேந்திர ராவ், ‘‘தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நான் நினைக்கவில்லை. தொழில் போட்டியாக இருந்தால் சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவார்கள். வெடிகுண்டு வைக்கும் அளவுக்கு போக மாட்டார்கள். இது வேறு காரணங்களுக்காக செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்