பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மங்களூருவில் நடந்த ஆட்டோ பிரஷர் குக்கர் விபத்தும் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தையும் தொடர்புப்படுத்தி பேசப்படுகிறது. இரண்டுக்கும் என்ன தொடர்பு?
பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ம் தேதி மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்துள்ளனர். அந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இதனால், பெங்களூரு மக்களை அச்சம் தொற்றியுள்ளது.
அதன்பின், மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, "ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான். குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவரின் பையில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. நிலைமை குறித்து ஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சரை நான் கேட்டுக்கொண்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அணுகுமுறை காரணமாக கும்பல் வன்முறைகள் நடப்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்றைய குண்டுவெடிப்பை மாநில அரசு அலட்சியப்படுத்தாமல், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்” எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சையத் நசீர் ஹுசைன் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது அவர் ஆதரவாளர்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷங்கள் எழுப்பியதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் அரசைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பாஜகவினர் சட்டப்பேரவையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதை நினைவுக் கூர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷம் எழுப்பியதைக் காங்கிரஸ் அரசு சீரியஸாக எடுத்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்திருக்காது. அதற்கு சாதாரணமாக எதிர்வினையாற்றியது காங்கிரஸ் . அதனால் இன்று அது பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது” என விமர்சித்தார்.
இந்த நிலையில், 'பாஜக இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது' என முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர், “எனக்கு கிடைத்த தகவலின்படி உணவகத்தில் நண்பகல் 12 மணி அளவில் யாரோ ஒருவர் பையை வைத்து விட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவுகள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத செயல்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்படும். இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது இதுவே முதல்முறை. அந்த நபர் காசாளரிடம் உணவு பில்லை வாங்குவதற்காக சென்றுள்ளார். அதன்பின் உணவும் உட்கொண்டிருக்கிறார். 'டைமர் செட்' செய்து வெடிக்க வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது” எனக் கேட்டுக்கொண்டார்.
இன்று மார்ச் 2-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “2022 மங்களூரு பிரஷர் குக்கர் குண்டுவெடிப்பைப் போன்றே ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டுவெடிப்பு நிகழந்துள்ளது. நாங்கள் முறையாக விசாரணை நடத்தி வருகிறோம், விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம். பெங்களூரு மக்கள் அச்சப்பட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
மங்களூரு பிரஷர் குக்கர் குண்டு வெடிப்பு!: கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி மங்களூரில் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. குறைந்த வீரியம் கொண்ட ஐ.ஈ.டி குண்டு என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நிலையில்,கர்நாடக துணை முதல்வரே இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago