திரிபுராவின் திரிப்தா மோத்தா அமைப்புடன் முத்தரப்பு ஒப்பந்தம் - அமித் ஷா முன்னிலையில் கையெழுத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிப்ரா மோத்தா அமைப்புக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிப்ரா மோத்தா என்று பிரபலமாக அழைக்கப்படும் உள்நாட்டு முற்போக்கு பிராந்திய கூட்டணி மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரிடையே முத்தரப்பு ஒப்பந்தம் புதுதில்லியில் இன்று கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "திரிபுராவுக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது; ஆனால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற முடியும்.

வடகிழக்குப் பகுதியில் அமைதியையும் வளத்தையும் ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் 11 முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

நரேந்திர மோடியின் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான கனவை நனவாக்குவதில், திரிபுரா தனது பங்களிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வன்முறையற்ற வடகிழக்கு என்ற தொலைநோக்குப் பார்வைக்கு வடிவம் கொடுக்க உள்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மோடி அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள் காரணமாக, சுமார் 10,000 பேர் ஆயுதங்களைத் துறந்து பொது நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். இதன் விளைவாக வளர்ச்சிக்கான சூழல் உருவாகியுள்ளது.

வடகிழக்குப் பகுதியில் எல்லைகள், அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான 11 வெவ்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பணியாற்றியுள்ளது. இன்றைய ஒப்பந்தத்தின் மூலம், திரிபுரா சர்ச்சைகள் இல்லாத திரிபுராவாக மாறும். இப்போது உரிமைகளுக்காக போராட வேண்டியதில்லை. அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்க மத்திய அரசு முன்வந்துள்ளது" என தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், திரிபுராவின் பழங்குடி மக்களின் வரலாறு, நிலம் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார வளர்ச்சி, அடையாளம், கலாச்சாரம் மற்றும் மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், நல்ல தீர்வை உறுதி செய்வதற்காக, ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE