‘மாரடைப்பு பாதிப்புகளுக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல’ - ஐசிஎம்ஆர் ஆய்வை குறிப்பிடும் மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாரடைப்பு பாதிப்புகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணமல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்ட விரிவான ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இந்திய சுகாதாரம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மாண்டவியா, "உலகில் சுமார் 150 நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. இது அந்த நாடுகளில் மகத்தான நன்மதிப்பை உருவாக்கியுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி தவறான எண்ணங்களை உருவாக்க முயற்சிகள் நடந்தன. யாருக்காவது பக்கவாதம் ஏற்பட்டால், அதற்குக் காரணம் கோவிட் தடுப்பூசி என்று சிலர் நினைக்கிறார்கள். ஐசிஎம்ஆர் இதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 47 மூன்றாம் நிலை மருத்துவமனைகளின் பங்கேற்பின் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 18-45 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான நபர்கள், எந்த ஒரு அறியப்பட்ட நோய்த்தொற்றும் இல்லாமல், அக்டோபர் 2021-மார்ச் 2023 க்கு இடையில் திடீரென விவரிக்கப்படாத காரணங்களால் இறந்தவர்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு, உடல் ரீதியாக தீவிரமாக செயல்படுவது போன்ற வாழ்க்கை முறை காரணிகள், விவரிக்க முடியாத திடீர் மரணத்துடன் தொடர்புடையவை. எனவே, இந்த ஆய்வுக்காக, கோவிட்-19 தடுப்பூசி, தொற்று மற்றும் கோவிட்-19க்கு பிந்தைய நிலைகள், குடும்ப வரலாறு, புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்பாடு, மது அருந்துதல், இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பான தீவிர உடல் செயல்பாடுகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டன. அந்த ஆய்வில், கோவிட் தடுப்பூசி, மாரடைப்பு பாதிப்புகளுக்கு காரணமல்ல என்பது கண்டறியப்பட்டது.

வாழ்க்கை முறை, புகையிலை பயன்பாடு, அதிகப்படியாக மது அருந்துவது போன்றவை மாரடைப்புக்கு காரணங்களாக இருக்கின்றன. சில சமயங்களில் தவறான தகவல்கள் மக்களிடையே தவறான கருத்தை உருவாக்கிவிடும். நாம் எடுக்கும் எந்தவொரு முடிவும் தரவுகளின் அடிப்படையிலும், அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

நிபுணர்களின் ஆலோசனை மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் தடுப்பூசி போடுவது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுத்தது. தடுப்பூசி போடப்பட்டபோது, ​​இந்த தடுப்பூசி நல்லதல்ல என்று தவறான கருத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. தடுப்பூசி நன்றாக இருந்தால், பிரதமர் மோடி ஏன் அதை எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசியல் கேள்விகள் எழுப்பப்பட்டன. வயது காரணமாகவும், நோய்த்தொற்று இல்லாததன் காரணமாகவும், மூன்றாவது பிரிவில் அவர் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார்.

கோவிட் சமயத்தில் அதிகாரம் பெற்ற குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்கள் முடிவுகளை எடுத்தன. நான் ஒப்புதல் அளித்தேன். ஆனால் முடிவு அவர்களுடையது, என்னுடையது அல்ல. நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு 2022-23 இன்படி, ஜனவரி 6, 2023 நிலவரப்படி, நாடு முழுவதும் 220 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE