அரசியலுக்கு கம்பீர் முழுக்கு முதல் அம்பானி வீட்டு விசேஷம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 2, 2024

By செய்திப்பிரிவு

பெங்களூரு குண்டுவெடிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகக்கவசம், தொப்பி, கண்ணாடி, பேன்ட் சட்டை என நேர்த்தியாக ஆடை அணிந்து கையில் பையுடன் அந்த நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. உணவகத்துக்குள் உள்ள சிசிடிவி காட்சியில் அதே நபர் கைப்பையை அங்கே வைத்துவிட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளது.

“வீடியோ பதிவுகள் இருப்பதால் குற்றவாளியை பிடிப்பது எளிது”: “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் சம்பந்தப்பட்டவரை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்” என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேசியத் தலைநகர் டெல்லியில் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றங்களும் ஊழலும் அதிகரிப்பு: மம்தா அரசு மீது பிரதமர் தாக்கு: மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணா நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்து பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் நிகழ்வுகள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதே போன்று மார்ச் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை வஞ்சிக்கிறது பாஜக அரசு: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு: “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, ஒன்றிய நிதி தொகுப்புக்கு தமிழ்நாடு வழங்குகிற ஒரு ரூபாயில் திரும்பப் பெறுவது 29 பைசா மட்டும்தான் தான். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் பெறுவதோ இரண்டு ரூபாய் 73 பைசா ஆகும். கடந்த 10 ஆண்டு காலமாக நிதிப் பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் உள்நோக்கத்தோடு தென் மாநிலங்களை பாஜக வஞ்சித்து வருவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் போட்டி: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

எனினும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடலாம் என சொல்லப்பட்ட நிலையில், இந்த முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிடப் போவதாக காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

‘முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாருக்கு உண்மையான விடுதலை வழங்குக’: திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தீவிர அரசியலில் இருந்து விலகும் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்: தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பாஜக எம்.பி.,யும் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், அரசியல் தொடர்பான பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

கம்பீர் கடந்த ஆண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணியில் கவனம் செலுத்துவதற்காக தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக வந்த தகவலை முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மறுத்துள்ளார். அவர், "நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. மக்களுக்கு உதவுவதில் எனக்கு ஆர்வம் உள்ளது. ஆனால், அது எனது YOU WE CAN அறக்கட்டளை மூலம் நான் அதைத் தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

அம்பானிக்காக தரம் உயர்த்தப்பட்ட ஜாம்நகர் விமான நிலையம்: இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1-ல் தொடங்கிய திருமணத்துக்கு முந்தைய விழா ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் உலக பணக்காரரர்கள் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் மார்க் ஜுக்கர்பெர்க், ரிஹானா, இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட உலகப் பிரபலங்களும், இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், எம்.எஸ். தோனி, சானியா நேவால், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதையொட்டி, ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. அதன்படி, ஜாம்நகர் விமான நிலையத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமானங்களை வரவேற்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஜாம்நகர் விமான நிலையமானது பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையம் ஆகும். எனினும், ஒரு பயணிகள் முனையமும் செயல்படுகிறது. இந்த நிலையில் அம்பானி இல்ல விழாவுக்காக மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

இதனிடையே, அம்பானி வீட்டு விசேஷத்தில் பிரபல பாப் பாடகர் ரிஹானா கலந்துகொண்டு மேடையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவரது பிரபலமான ஆல்பமான ‘Work’ பாடலையும் பாடி நடனமாடினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது. இந்த நிகழ்வுக்காக அவருக்கு ரூ.74 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை ஏற்றம் பெற்று வந்தது. இந்த நிலையில், ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.5,940-க்கு விற்பனைக்கும், சரவனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.47,520-க்கும் விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்