“வீடியோ பதிவுகள் இருப்பதால் குற்றவாளியை பிடிப்பது எளிது” - கர்நாடக முதல்வர் @ பெங்களூரு குண்டுவெடிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் சம்பந்தப்பட்டவரை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்” என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா கூறுகையில், "முகக் கவசமும் தொப்பியும் அணிந்த, பேருந்தில் வந்த ஒரு நபர் டைமரைப் பயன்படுத்தி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தக் குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். அனைவரும் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை நேற்று துணை முதல்வர் சிவக்குமாரும், மாநில உள்துறை அமைச்சரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நானும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும், சம்பவம் நடந்த இடத்துக்கும் சென்றும் பார்வையிட உள்ளேன். இந்தச் சம்பவம் தனிநபரின் செயலா அல்லது ஏதவாது அமைப்பு இதன் பின்புலத்தில் உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை.

குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். அவர் பேருந்தில் இருந்து இறங்குவது, உணவகத்தில் டிபன் வாங்குவது, ஓர் இடத்தில் உட்காருவது, பை ஒன்றை வைப்பது என அனைத்துக் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அவரை நாம் எளிதாக பிடித்துவிடலாம்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார் முதல்வர் சித்தராமையா.

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கும் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்கும் உள்ள ஒற்றுமை குறித்து கேட்டதற்கு “விசாரணை நடந்து வருகிறது” என்று அவர் பதிலளித்தார்.

ஆளுங்கட்சியின் சமரச அரசியல் காரணமாகத்தான் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த முதல்வர், “பாஜக இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. அதுவும் சமரச அரசியலால் நடந்தததா? இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கையின்படி சரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

விசாரணை தீவிரம்: ‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த குற்றவாளி டைமர் கருவியைப் பயன்படுத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் அடங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொப்பி, கண்ணாடி, பேன்ட் சட்டை என நேர்த்தியாக ஆடை அணிந்து கையில் பையுடன் அந்த நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. உணவகத்துக்குள் உள்ள சிசிடிவி காட்சியில் அதே நபர் கைப்பையை அங்கே வைத்துவிட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

அந்த நபர் உணவகத்தில் பையை வைத்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் அவரைக் கண்டறிய தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடும் பணி நடந்த நிலையில் அந்த நபரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த நபர் உடுப்பியில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் உடுப்பி, மங்களூரு பகுதிகளுக்கும் தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.

விசாரணைகள், ஆய்வுகள், ஆலோசனைகள் ஒருபுறம் இருக்க, இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள ஷரீக் உள்ளிட்ட 4 பேரிடம் இன்று காலை முதல் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் 4 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதானவர்களாவர். மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரீக், அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ரகசியமாக இயங்கிவந்த ‘பேஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பில் உறுப்பினராக இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த குண்டு வெடிப்பு நடந்ததுபோலவே நேற்றைய ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளதால் அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக, பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் முழு விவரம்: பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடிப்பு: காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

இதனிடையே, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தேசியத் தலைநகர் டெல்லியில் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் விவரம்: பெங்களூரு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டெல்லியில் உஷார் நிலை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்