ஜார்க்கண்ட், மே.வங்கத்தில் ரூ.42,900 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உர ஆலை, மின் உற்பத்தி நிலையம், ரயில் பாதை உட்பட ரூ.35,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும், மேற்கு வங்க மாநிலத்தில் துறைமுகம், எண்ணெய் குழாய், எல்பிஜி காஸ் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை உட்பட ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஜார்க்கண்ட் தன்பாத் மாவட்டத்தில் சிந்திரியில் ரூ.8,900 கோடி மதிப்பிலான ஹிந்துஸ்தான் உர்வரக் ரசாயன் உர ஆலையை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஆலை மூலம் நாட்டின் யூரியா தயாரிப்பு ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது நாட்டில் திறக்கப்படும் மூன்றாவது உர ஆலையாகும். 2021 ஆண்டு டிசம்பர் மாதத்தில் உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரிலும், 2022 நவம்பரில் தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்திலும் உர ஆலைகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உர ஆலை தவிர, சோன் நகர் - அண்டால், டோரி - ஷிவ்பூர், பிரடோலி - ஷிவ்பூர் இடையிலான புதிய ரயில் பாதை திட்டங்களுக்கும் நேற்று அவர் அடிக்கல் நாட்டினார். இது தவிர்த்து, ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

மேலும், சத்ராவில் உள்ள வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் (STPP) முதல் பகுதியை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராம்கர் மாவட்டத்தில் நிலக்கரி திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த வளர்ச்சித் திட்டங்கள்குறித்து நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், “ஜார்க்கண்ட் மக்களுக்கு ரூ.35,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சிந்திரியில் உர ஆலை அமைக்கப்படும் என்றுஉத்தரவாதம் கொடுத்திருந்தேன். இன்று அது நிறைவேறியுள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு இந்த ஆலை மூலம் வேலை கிடைக்கும். 2014-ல் 225 லட்சம் டன்னாக இருந்த உர உற்பத்தி தற்போது 310 லட்சம் டன்னாக மாறியுள்ளது. இந்த ஆலை மூலம் நாடு உரத் தயாரிப்பில் சுயசார்பை அடையும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பழங்குடிமக்கள், ஏழைகள், இளைஞர்கள்,பெண்கள் ஆகியோரை மேம்படுத்துவது மத்திய அரசின் முதன்மை இலக்காக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்டைத் தொடர்ந்து மேற்கு வங்கத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, ரயில், துறைமுகம், எண்ணெய் குழாய், எல்பிஜி காஸ்விநியோகம், கழிவுநீர் மேலாண்மைஉட்பட ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், “சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலேயே ஹல்டியா - பரவுனி இடையே 518 கிமீ தூரத்துக்கு ரூ.2,790 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் குழாய் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்க மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவருகிறது. ஆனால், இந்தத் திட்டங்களை மாநில அரசு தடுத்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்