டெல்லிக்கு புதிய முகங்களை தேடும் பாஜக @ மக்களவைத் தேர்தல்

By செய்திப்பிரிவு

டெல்லி யூனியன் பிரதேசத்தில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. இதில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. எனவே பாஜக சார்பில் டெல்லி தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய பாஜக எம்பிக்களுக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா, அவர்கள் சிறப்பாக பணியாற்றினார்களா, தேர்தலில் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறதா என்பன குறித்து டெல்லி பாஜக சார்பில் 3 முறை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை கட்சித்தலைமையிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

பாஜக தலைமை சார்பில் நாளை 150 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும். அப்போது டெல்லியின் 3 அல்லது 4 தொகுதி களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறையும் 7 தொகுதிகளையும் நாங்களே கைப்பற்றுவோம். ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனினும் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறோம்.

இந்த முறை வலுவான வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். குறிப்பாக 3 தொகுதிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர், முன்னாள் மத்திய அமைச்சரின் மகள், ஒரு மத்திய அமைச்சர் ஆகியோர் புதிதாக டெல்லியில் களமிறக்கப்படக்கூடும். இதுதொடர்பாக கட்சித் தலைமை இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE