திருவனந்தபுரம்: "2035-ம் ஆண்டில் இந்தியாவுக்கென சொந்த விண்வெளி நிலையம் இருக்கும். மேலும், இந்த அமிர்த காலத்தில், ஒரு இந்திய விண்வெளி வீரர் இந்திய ராக்கெட்டில் நிலவில் இறங்குவார்." என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எஸ்.எல்.வி ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் புதிய 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின், நிலைப் பரிசோதனை வசதி, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 'டிரைசோனிக் காற்றியல் சுரங்கம்' ஆகியவை அடங்கும்.
இதற்கிடையே, இன்றைய நிகழ்வின்போது ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்களை அறிமுகம் செய்துவைத்ததோடு, அவர்களுக்கு 'விண்வெளி வீரர் பதக்கங்களை' வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய பிரதமர், "ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணமும் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையினரையும் வரையறுக்கும் சிறப்பான தருணங்களைக் கொண்டுள்ளது. நிலம், காற்று, நீர், விண்வெளி ஆகியவற்றில் நாட்டின் வரலாற்று சாதனைகள் குறித்து தற்போதைய தலைமுறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம். அயோத்தியில் உருவான புதிய காலச் சக்கரத்தின் தொடக்கம், உலக அளவில் இந்தியா தொடர்ந்து தமது இடத்தை விரிவுபடுத்தி வருகிறது. அதன் அம்சங்களை நாட்டின் விண்வெளித் திட்டத்தில் காணலாம்.
» ‘தோழமை கட்சிகளின் வெற்றியை குறைப்பது இண்டியா கூட்டணி நோக்கம் அல்ல” - ஒமர் அப்துல்லா
» முகேஷ் அம்பானி மகன் திருமண விருந்தில் 2,500 விதமான உணவு - ஆசியா முதல் மெக்சிகோ வரை நீளும் மெனு!
சந்திரயான் விண்கலத்தின் வெற்றி மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இன்று சிவ-சக்தி முனை உலகில் இந்தியாவின் வலிமையை அறிமுகப்படுத்துகிறது. விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்ட நான்கு ககன்யான் வீரர்களின் அறிமுகம் ஒரு வரலாற்று நிகழ்வு. அவை வெறும் நான்கு பெயர்கள் அல்லது தனிநபர்கள் அல்ல, அவை 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்கிறார். ஆனால், தற்போதைய தருணத்தில் ராக்கெட் நமக்கு சொந்தமானது. விண்வெளி வீரர்களாக நியமிக்கப்படுபவர்களை சந்தித்து நாட்டுக்கு அறிமுகம் செய்து வைப்பது மகிழ்ச்சி தருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துகள்.
விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்ட இந்த நால்வரின் பெயர்கள் இந்தியாவின் வெற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்றைய இந்தியாவின் நம்பிக்கை, துணிச்சல், வீரம், ஒழுக்கத்தின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள். பயிற்சியில் அவர்களின் அர்ப்பணிப்பு, முயற்சியைப் பாராட்ட கூடியது. அவர்கள் இந்தியாவின் அமிர்த தலைமுறையின் பிரதிநிதிகள். அனைத்துத் துன்பங்களையும் சவாலுக்கு உட்படுத்தும் வலிமையைக் காட்டுகிறார்கள்.
இந்த இயக்கத்திற்கு ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதின் அவசியம். அதன்படி, பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக யோகா பங்காற்றியது. நாட்டின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் நால்வரின் மீது உள்ளது. ககன்யான் திட்டத்துடன் தொடர்புடைய இஸ்ரோவைச் சேர்ந்த அனைத்துப் பயிற்சி ஊழியர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.
நான்கு விண்வெளி வீரர்கள் மீது பிரபலங்களின் கவனம் செலுத்தப்படுவது அவர்களின் பயிற்சியில் இடையூறை ஏற்படுத்தக்கூடும். எனவே, தேர்வாகியுள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதனால் அவர்கள் கவனச்சிதறல் இல்லாமல் தங்கள் பயிற்சியைத் தொடர முடியும்.
ககன்யானில் உள்ள பெரும்பாலான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறவுள்ள நிலையில், ககன்யான் தயாராகி வருவது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தும்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் மகளிர் சக்தியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அது சந்திரயான் விண்கலமாக இருந்தாலும் சரி, ககன்யானாக இருந்தாலும் சரி, பெண் விஞ்ஞானிகள் இல்லாமல் இதுபோன்ற எந்த ஒரு திட்டத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. இஸ்ரோவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமைப் பதவிகளில் உள்ளனர்.
இளைய தலைமுறையினரிடையே அறிவியல் மனப்பான்மைக்கான விதைகளை விதைப்பதே இந்தியாவின் விண்வெளித் துறையின் முக்கிய பங்களிப்பு. இஸ்ரோ அடைந்துள்ள வெற்றி, இன்றைய குழந்தைகளிடையே விஞ்ஞானியாக வளரும் எண்ணத்தை விதைக்கிறது. ராக்கெட்டின் கவுண்ட் டவுன் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. இன்று காகித விமானங்களை உருவாக்குபவர்கள் இவர்களைப் போன்ற விஞ்ஞானிகளாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
இளைஞர்களின் மன உறுதி ஒரு நாட்டின் செல்வத்தை உருவாக்குகிறது. சந்திரயான் 2 தரையிறங்கும் நேரம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியது இளைஞர்களுக்கு புதிய சக்தியை ஊட்டியது. இந்த நாள் இப்போது விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
விண்வெளித் துறையில் நாடு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது, ஒரே ராக்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஆதித்யா எல்1 சூரிய ஒளி விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது போன்றவை குறிப்பிடத்தக்கது. வெகு சில நாடுகளே இதுபோன்ற சாதனைகளைச் செய்துள்ளன. 2024-ம் ஆண்டின் முதல் சில வாரங்களில் செயற்கைக் கோள் கண்காட்சி, இன்சாட் 3டிஎஸ் கிடைத்த வெற்றிகள் இதற்கு உதாரணம்.
இஸ்ரோ குழுவினர் அனைவரும் எதிர்காலச் சாத்தியக்கூறுகளின் புதிய கதவுகளைத் திறக்கிறீர்கள். மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் ஐந்து மடங்கு வளர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் 44 பில்லியன் டாலர்களை எட்டும். விண்வெளித் துறையில் இந்தியா உலகளாவிய வர்த்தக மையமாக மாறி வருகிறது. வரும் நாட்களில், இந்தியா மீண்டும் சந்திரனுக்குச் செல்லும். நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை மீட்டெடுக்கும். வீனசும் நமது ரேடாரில் உள்ளது. 2035-ம் ஆண்டில் இந்தியாவுக்கென சொந்த விண்வெளி நிலையம் இருக்கும். மேலும், இந்த அமிர்த காலத்தில், ஒரு இந்திய விண்வெளி வீரர் இந்திய ராக்கெட்டில் நிலவில் இறங்குவார்.
கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்கள் சார்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 அல்லது 3-ல் இருந்து 200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையான விண்வெளித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய விண்வெளி நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் நிறுவ முடியும். இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்க முடியும்.
விண்வெளி அறிவியல் என்பது ராக்கெட் அறிவியல் மட்டுமல்ல, அது மிகப்பெரிய சமூக அறிவியலும் கூட. விண்வெளி தொழில்நுட்பத்தால் சமூகம் மிகவும் பயனடைகிறது. வேளாண்மை, வானிலை தொடர்பான, பேரிடர் எச்சரிக்கை, நீர்ப்பாசனம் தொடர்பான, வழிசெலுத்தல் வரைபடங்கள் மற்றும் மீனவர்களுக்கான நேவிக்கேசன் அமைப்பு போன்ற பிற பயன்பாடுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
எல்லைப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற விண்வெளி அறிவியலின் பிற பயன்பாடுகளும் அடக்கம். வளர்ச்சியடைந்த பாரத அமைப்பை உருவாக்குவதில் உங்களுக்கும், இஸ்ரோ மற்றும் ஒட்டுமொத்த விண்வெளித் துறைக்கும் பெரும் பங்கு உள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த விழாவில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் முரளீதரன், விண்வெளித் துறை செயலாளரும், இஸ்ரோ தலைவருமான எஸ். சோம்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago