மாநிலங்களவைத் தேர்தல் | ’கட்சி மாறி வாக்கு’ ஊகங்களுக்கு மத்தியில் 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 13 மாநிலங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. ஏற்கனவே 41 உறுப்பினர்கள் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உத்தரப் பிதேசத்தில் 10 உறுப்பினர்கள், கர்நாடகாவில் 4, இமாச்சலப்பிரதேசத்தில் 1 இடங்களுக்கான வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. மாலை 4 மணிவரைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. மாலை 5 மணிக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. கட்சிமாறி வாக்களிக்கலாம் (கிராஸ் வோட்டிங்) ஊகம் நிலவி வருவதால் கட்சிகள் தங்களின் எம்எல்ஏக்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

உத்தர பிரதேச நிலவரம்: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி 8 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி, பாஜக 7 உறுப்பினர்களையும், சமாஜ்வாதி கட்சி 3 உறுப்பினர்களையும் மாநிலங்களவைக்கு அனுப்பும் பலம் பெற்றுள்ளன. என்றாலும் பல எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற ஊகங்களும் நிலவுகிறது.

கர்நாடகா நிலவரம்: கர்நாடகா மாநிலத்தில் உள்ள 4 மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியில், காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் மக்கான், சையது நசீர் ஹுஸைன் மற்றும் ஜி.சி. சந்திரசேகர் ஆகியோரும், பாஜக சார்பில் நாராயண்சா பண்டேஜ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டி ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கேயும் கட்சி மாறி வாக்களிக்கும் ஊகம் நிலவுவதால் மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க உள்ள தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சி தங்களின் எம்எல்ஏகளை ஒட்டுமொத்தமாக ஹோட்டலுக்கு மாற்றியுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களையும், பாஜக 1 உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கும் பலம் பெற்றுள்ளன. மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெறுவதற்கு ஒருவருக்கு 45 வாக்குகள் வேண்டும். கர்நாடகாவில் 224 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் வசம் 135, பாஜக வசம் 66 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதன்படி, காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களையும் அக்கட்சி வெற்றி பெற வைக்க முடியும்.

பாஜகவின் 66 எம்எல்ஏக்கள் மூலம் அக்கட்சியின் பிரதான வேட்பாளர் நாராண்சா பண்டேஜ் வெற்றியடைவார். பாஜக எம்எல்ஏக்களின் உதவியுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் 19 எம்எல்ஏகளின் வாக்குகளுடன் அக்கட்சியின் குபேந்திர ரெட்டி வெற்றி பெற மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களின் வாக்குகளுடன் குறைந்தது மூன்று காங்கிரஸ் எம்எல்ஏகளின் வாக்குகளும் வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அங்கும் கட்சி மாறி வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது.

இமாச்சலப்பிரதேச நிலவரம்: அதேபோல் இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதன் மாநிலங்களவை வேட்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்க கட்சியின் அனைத்து எம்எல்ஏ-களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் அதன் எம்எல்ஏக்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று பாஜக தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40 எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE