மாநிலங்களவைத் தேர்தல் @ உ.பி | 8-க்கு குறிவைக்கும் பாஜக; பேரம் பேசுவதாக சமாஜ்வாதி புகார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று (பிப்.27) 13 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக - சமாஜ்வாதி இடையேயான போட்டா போட்டி கவனம் பெற்றுள்ளது. அங்குள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் 7 இடங்களில் பாஜக எளிதாகக் கைப்பற்றும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3-ஐ சமாஜ்வாதி கைப்பற்றுமா இல்லை பறிகொடுக்குமா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.

அகிலேஷின் குற்றச்சாட்டு: முன்னதாக நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்தப் பேட்டியில், “எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீது பாஜகவினர் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசாங்கமே இத்தகைய நெருக்கடி ஏற்படுத்துகிறது. இப்படித்தான் இவர்கள் (பாஜக) இயங்குகிறார்கள். அவர்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். மிரட்டல் விடுக்கிறார்கள். பழைய வழக்குகளை சுட்டிக் காட்டி அச்சுறுத்துகின்றனர். விசாரணை அமைப்புகளை ஏவிவிடுகின்றனர். ஆனால் இனியும் இவர்களில் அச்சுறுத்தல்கள் பலிக்காது” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

8வது வேட்பாளர் சஞ்சய் சேத்: சமாஜ்வாதி கட்சி சார்பில், நடிகை, எம்பி ஜெயா பச்சன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 10 உறுப்பினர்களுக்கு 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக 8 பேரை களமிறக்கியுள்ளது. 8வது நபராக சஞ்சய் சேத் பாஜக சார்பில் நிறுத்தப்படுகிறார். நேற்றிரவு சமாஜ்வாதி கட்சி சார்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் அக்கட்சி எம்எல்ஏ.,க்கள் சிலர் பங்கேற்கவில்லை. இவர்கள் கட்சிமாறி வாக்களிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் எளிதாக வெல்ல வேண்டிய 3 இடங்களில் ஒன்றை சமாஜ்வாதி பறிகொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல் எங்கு? எப்படி? மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநில சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் (எம்எல்ஏ) மறைமுகமாக மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

13 மாநிலங்களைச் சேர்ந்த50 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், 2 மாநிலங்களைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஏப்ரல் 3-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளனர்.இந்நிலையில் இன்று (பிப்.27) மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 15 மாநிலங்களின் 56 தொகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

இதையடுத்து, உத்தர பிரதேசம் (10), மகாராஷ்டிரா (6), பிஹார் (6), மேற்கு வங்கம் (5), மத்திய பிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகா (4), ஆந்திர பிரதேசம் (3), தெலங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிசா (3), உத்தராகண்ட் (1), சத்தீஸ்கர் (1), ஹரியாணா (1), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE