பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி அளவுக்கு ஊழல், சந்தேஷ்காலி பகுதியில் பழங்குடியின பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உட்பட பல்வேறு வழக்குகள் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மீது உள்ளன. சந்தேஷ்காலியில் போராட்டம் பெரிதானதால் அவர் தலைமறைவானார்.

இந்த சூழலில் சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக சுதந்திரமான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சிவஞானம், நீதிபதி ஹிரண்மோய் பட்டாச்சார்யா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியங்கா கூறும்போது, “ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்களை போலீஸார், ஆளும் திரிணமூல் காங்கிரஸார் மிரட்டுகின்றனர். ஷேக் ஷாஜகான் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதற்கு உயர் நீதிமன்றம்தான் காரணம் என்று காவல்துறை கூறுகிறது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’’ என்று கோரினார்.

மேற்குவங்க அரசு தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 18 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். மக்களின்புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'’ என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சிவஞானம் கூறியதாவது:

கடந்த ஜனவரி 5-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஷேக் ஷாஜகானை கைது செய்வதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இதுவரை எந்த உத்தரவையும் பிறக்கவில்லை. கடந்த 20 நாட்களாக காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. ஷாஜகானை ஏன் கைது செய்யவில்லை?

அவரை கண்டுபிடிப்பது தொடர்பாக வங்கமொழி மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட வேண்டும். மாநில காவல் துறை அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE