கியான்வாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் மத வழிபாடு நடத்த அனுமதி அளித்த மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்கினை விசாரித்த நீதிபதி ரோகித் ரஞ்சன் அகவர்வால், "வழக்கின் அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து, அனைத்து தரப்பின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர் கடந்த, ஜன.1, 2024-ல் மாவட்ட நீதிமன்றம், டி.எம். வாரணாசியை சொத்துரிமையாக நியமித்ததையும், ஜன.31, 2024ம் தேதி கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துகள் வழிபாடு நடத்த வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த முகாந்திரத்தையும் இந்த நீதிமன்றம் காணவில்லை" என்று கூறி மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக, பிப்.15ம் தேதி முதல் நான்கு நாட்கள் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி அகர்வால் தீப்பினை ஒத்திவைத்திருந்தார்.

முன்னதாக, கியான்வாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளை, பிப்.1ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

வழக்கு பின்னணி: வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், “கியான்வாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா புதன்கிழமை ‘கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE