பாஜகவில் இணைந்த பகுஜன் எம்.பி.

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில் கட்சி விட்டு கட்சி தாவும் சம்பவங்கள் அரசியல் அரங்கில் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், கட்சி தலைமைக்கு நான் தேவையில்லை என்று கடிதம் எழுதிவிட்டு மாயாவதி மீது உள்ள விரக்தியால் பாஜகவில் நேற்று இணைந்துள்ளார் பகுஜன் சமாஜ் எம்.பி. ரித்தேஷ் பாண்டே.

இவர் அம்பேத்கர் நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவரது தந்தை ராகேஷ் பாண்டே உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ.வாக உள்ளார்.

முன்னதாக நேற்று காலை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு பாண்டே அனுப்பிய ராஜினாமா கடிதத்தை எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில், “முக்கிய விவாதங்களுக்கு நீண்ட நாட்களாக நான் அழைக்கப்படவில்லை. தலைமையை சந்திக்க பலமுறை முயற்சி எடுத்தும் பலனில்லை. கட்சிக்கு இனி நான் தேவையில்லை.

அதனால் ராஜினாமா செய்கிறேன் என்று பாண்டே தெரிவித்துள்ளார். எம்.பி.யின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி தரும் விதமாக மாயாவதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சி, அம்பேத்கரின் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இயக்கம். அதனால்தான் இந்த கட்சியின் சித்தாந்தம், செயல்பாடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறை ஏனைய முதலாளி கட்சிகளிலிருந்து வேறுபட்டுள்ளது.

கட்சியின் எம்.பி.க்கள் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். சுயநல நோக்கோடு செயல்படுவோருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க முடியுமா? என்று தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் அம்பேத்கர் நகர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிட ரித்தேஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு தர பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE