மக்களவைத் தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்க முதல் முறை வாக்காளர்கள் திரண்டு வரவேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 110-வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது: வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாட உள்ளோம். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்களின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக இந்த நாள் அமையும். பெண்களுக்கு சம வாய்ப்புகிடைத்தால்தான் உலகம் செழிப்படையும் என்று மகாகவி பாரதியார் கூறியுள்ளார். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சக்தி இப்போது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் நாட்டில் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் ட்ரோன்களை இயக்குவார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அது சாத்தியமாகி இருக்கிறது. 'நமோ ட்ரோன் டிடி' திட்டத்தின் பயனாளியான, உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த சுனிதாவிடம் பேசினேன். அவர் இந்த திட்டம் வேளாண்மை துறையை நவீனமாக்க பெரிதும்உதவுவதாக தெரிவித்தார். பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்காகட்ரோன் பயன்படுத்தப்படுவதாகவும் இதற்கான பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டுள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்யாணி பிரபுல்லா பாட்டீலுடன் பேசினேன். அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் பல்வேறுதுறைகளில் பெண் சக்தி பரவியிருப்பதை உணர முடிகிறது. நமது பெண் சக்தியின் இந்த உணர்வை நான் மீண்டும் ஒருமுறை என் இதயத்தின் ஆழத்திலிருந்து பாராட்டுகிறேன்.

இப்போது செல்போன் மற்றும்டிஜிட்டல் சாதனங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிஉள்ளது. வன விலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 3-ம் தேதி 'உலக வனவிலங்கு தினம்' கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வனவிலங்கு தினம் டிஜிட்டல் புத்தாக்கம் என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளை பாதுகாக்க தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில்அறிவிக்கப்பட உள்ளது. இதில்முதல் முறை வாக்காளர்கள்அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க திரண்டு வரவேண்டும். மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் வரும் மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

எனவே அரசியல் நாகரிகம் கருதி அடுத்த 3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகாது. ஆனாலும் நாட்டின் சாதனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் எனவே, சமுதாயம் மற்றும் நாட்டின் சாதனைகளை தொடர்ந்து அனுப்புங்கள். தேர்தல் முடிந்த பிறகு 111-வது நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். இது மிகவும் சிறப்பான எண் ஆகும். அடுத்த நிகழ்ச்சியில் புதிய ஆற்றல் மற்றும் புதிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE