பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அலிகர்: “பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.விவசாயிகள் இன்னும் சாலைகளில் போராடி கொண்டிருக்கிறார்கள்” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. அலிகர் நகரில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்து பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி எழுப்பினார்.

யாத்திரையில் பேசிய பிரியங்கா காந்தி, “10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. ஜி20 உச்சி மாநாடு போன்ற பல பெரிய நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளால் நாட்டின் மரியாதை அதிகரித்து வருகிறது என்று எல்லோரும் சொன்னார்கள். நாங்களும் அதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். நமது நாட்டுக்கு கிடைக்கும் மரியாதையில் இளைஞர்கள், மாணவர்களுக்கு தொடர்பில்லையா?.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள் இன்னும் சாலைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பணவீக்கம் நாட்டு மக்களுக்கு சுமையாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ராணுவம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. அதனை தடுத்து தற்போது அரசு அக்னிவீரர் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் கரும்பு விலை வெறும் 55 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனை.” என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE