மோடி, அமித் ஷா உட்பட 100 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் - அடுத்த வாரம் வெளியிடும் பாஜக

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 100 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அடுத்த வாரம் வெளியிடும் எனத் தெரிகிறது. இதில் மோடி போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

வரும் மார்ச் 14-ம் தேதிக்குப் பிறகு மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட்கள், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாரித்து வருகின்றன. இந்நிலையில் பாஜக மேலிடம், தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வேட்பாளர்கள் பெயர்களை இறுதி செய்யும் பணியில் பாஜக மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வாரம் வெளியாக உள்ள பட்டியலில் 100 வேட்பாளர்கள் இடம்பெறுவர். மேலும் இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியும் இடம்பெறும் எனத் தெரிகிறது.

கடந்த 2014, 2019 தேர்தல்களில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். எனவே, இந்த முறையும் அவர் அதே தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்தப் பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரும் இடம்பெறும் எனத் தெரிகிறது. அவர் கடந்த முறை குஜராத் மாநிலம் காந்தி நகரிலிருந்து போட்டியிட்டு வாகை சூடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்த முறை எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்பது தெரியவில்லை. கடந்த 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

எனவே, இந்த முறை 400 இடங்களைத் தாண்டி பாஜக வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 370 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெறுவதற்கான பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE