உ.பி. முதல்வரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 பேர் காயம்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் வாகனம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காயங்கள் எதுவுமின்றி தப்பினார்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (பிப்.24) மாலை லக்னோ விமான நிலையத்திலிருந்து தனது கான்வாயில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அருண்கன்ச் என்ற பகுதியில் சாலையில் நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததால், ஓட்டுநர் நாயின் மீது மோதிவிடாமல் இருக்க காரை திருப்பியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்றுகொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது. இதனையடுத்து அந்த கார் சாலையில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் கான்வாயில் பயணம் செய்த காவலர்கள், எதிரே வந்த வாகனத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். வேறு ஒரு வாகனத்தில் இருந்ததால் இந்த விபத்தில் முதல்வர் ஆதித்ய்நாத்துக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக அங்குவந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ட்வீட் செய்துள்ள உ.பி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், “தெருவிலங்குகள் பிரச்சினையை பாஜக அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், இன்று முதல்வர் சென்ற வாகனமே விபத்தில் சிக்கி, பலர் காயம் அடைந்துள்ளனர். இது சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. உ.பி.யில் தெருவிலங்குகளின் பிரச்சினை என்பது அபாயகரமான உண்மை. இது மக்களின் உயிர்களை கேள்விக்குள்ளாக்குகிறது. இப்போது உங்கள் கண்கள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE