உ.பி.யில் குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து: 7 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் குளத்தில் டிராக்டர் தவறி விழுந்ததில் 7 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநிலத்தின் காதர்கஞ்ச் பகுதியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. காதர்கஞ்ச் பகுதியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் 7 குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த பக்தர்கள் 'மக பூர்ணிமா' விழாவில் புனித நீராடுவதற்காக கங்கை நதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE