டெல்லி சலோ போராட்டத்தில் வன்முறை: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியாணா - டெல்லி மாநிலங்களை ஒட்டிய ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இளம் விவசாயி மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாகக் கடைபிடிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று (பிப்.23) கருப்பு வெள்ளியாக கடைபிடிக்கின்றனர். பாரதிய கிசான் யூனியன், சம்யுக்த் கிசான் மோர்சா அமைப்புகள் இதில் பங்கேற்றுள்ளன.

கடந்த 2020-21-ம் ஆண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு ஷம்பு எல்லை நிலவரம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த எஸ்கேஎம் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் எஸ்கேஎம் சார்பில் வரும் 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகளின் தலைவர் ராகேஷ் டிகைத் அறிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசுடன் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வுகாணப்படாததால், ஷம்பு எல்லையில் இருந்து தடைகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி செல்ல நேற்று முன்தினம் முயன்றனர். அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகள் மூலம் போலீஸார் சுட்டனர். இதில் சுப்கரன் சிங் (21) என்ற விவசாயி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்துள்ள விவசாயியின் தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், விவசாயிகள் டெல்லி எல்லையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாகக் கடைபிடிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஹரியாணா முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

விவசாயிகள் அமைப்பு தலைவர் சர்வன் சிங் பாந்தர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “விவசாயி சுப்கரன் சிங் மறைவு தொடர்பாக நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை பஞ்சாப் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. உரிய இழப்பீடு தரப்படும் என்றும் அவரது மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து 14 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது வருத்தத்துக்குரியது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE