தெலங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் மரணம்

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் (பிஆர்எஸ்) செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா (36) இன்று (பிப்.23) காலை ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காரை 130 கி.மீ வேகத்தில் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த தெலங்கானா மாநில தேர்தலில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் இருந்து பிஆர்எஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் லாஸ்யா நந்திதா (36). இவர் பாஜக வேட்பாளரை விட 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதே தொகுதியில் பிஆர் எஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த சாயண்ணா என்பவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். ஆதலால், சாயண்ணாவின் மகளான லாஸ்யாவிற்கு பிஆர்எஸ் கட்சி இம்முறை சீட் வழங்கியது.

இளம் வயது எம்எல்ஏவான லாஸ்யா நந்திதா, இன்று அதிகாலை 5 மணியளவில், தனது உதவியாளர் அசோக்குடன் மெட்சல் பகுதியில் இருந்து சதாசிவ பேட்டா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செகந்திராபாத் வெளி வட்ட சாலையில் இவர்களின் கார் வேகமாக சுமார் 130 முதல் 150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, பட்டான் செருவு எனும் இடத்தில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஒரு லாரியை முந்திய போது கார் நிலை தடுமாறி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் 2 பல்டிகள் அடித்து சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உதவியாளரே காரை ஓட்டியதால் அவர் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவியாளர் அசோக்கை பட்டான் செருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து பட்டான் செருவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கார் சுமார் 130 முதல் 150 கி.மீ வேகத்தில் அலட்சியமாக ஓட்டியதும், கார் சீட் பெல்ட்டை எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா அணியாததும் அவர் மரணத்திற்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா மரணமடைந்த தகவல் அறிந்ததும், பிஆர் எஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர ராவ் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதேபோன்று, தற்போதைய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தமது இரங்கல்களையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள் உயிரிழந்த எம்.எல்.ஏ லாஸ்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவரான கேடி ராமாராவ் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் குறிப்பில், “லாஸ்யாவின் மறைவு குறித்து துக்கச் செய்தி தற்போதுதான் கிடைக்கப் பெற்றேன். ஓர் இளம் தலைவரை இழந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

துரத்திய மரணம்: இன்று காலை கார் விபத்தில் உயிரிழந்த செகந்திராபாத் கண்டோன்மெண்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா வை மரணம் துரத்தி கொண்டே வந்துள்ளது. லாஸ்யா நந்திதா கடந்த 1987ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் கம்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்று, 2015ல் அரசியலில் பிரவேசித்தார். 2016ல் தனது தந்தையார் மறைந்த சாயண்ணாவுடன் பிஆர் எஸ் கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து, 2016 முதல் 20 வரை காபாடிகூடா மாநராட்சி கவுன்சிலராக பணியாற்றினார்.

இந்நிலையில், 2023ல் தனது தந்தையார் சாயண்ணா மரணமடைந்ததை தொடர்ந்து செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியில் பிஆர் எஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். லாஸ்யா நந்திதாவை மரணம் துரத்தி கொண்டே வந்து இன்று வெற்றி பெற்றுள்ளது. இவர் ஒரு முறை லிஃட்டில் சிக்கி கொண்டார். பல மணி நேரத்திற்கு பின்னர் இவர் மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தின் போது, நல்கொண்டா மாவட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் இவர் செகந்திராபாத் திரும்பிய போது, இவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் லாஸ்யா நந்திதா படுகாயத்துடன் உயிர் தப்பினார். அதிலிருந்து மீண்ட அவர், 3வது முறையாக இன்று காலை நடந்த கார் விபத்தில் உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE