‘ஜெகனின் சர்வாதிகார ஆட்சி...’ - ஒய்.எஸ்.ஷர்மிளா கைது @ ஆந்திர தலைமைச் செயலக முற்றுகை போராட்டம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீஸ் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சவால்விடும் வகையில், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமித்தது மேலிடம். ஷர்மிளா பரபரவென சுழன்று வருகிறார். இந்நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்டத்தை தடுக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இருந்து வெளியே வராதபடி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், வீட்டுக் காவலை தவிர்க்கும் முயற்சியாக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

இதனைத் தொடர்ந்து, ஷர்மிளா ஆந்திர மாநில தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விஜயவாடாவில் இன்று முன்னெடுத்தார். இதனால் போலீஸார் தடுக்க முயற்சித்தனர். ஆனால் தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்த ஷர்மிளா முயன்றார். இதனால் போலீஸார் அவரை கைது செய்தனர்.

அப்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பெண் போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் இழுத்துச் சென்றதால், ஷர்மிளாவின் கைகளில் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மங்களகிரி காவல் நிலையத்துக்கு வெளியே பேசும்போது, “ஒரு பெண் அரசியல் தலைவரை இந்த அரசு எப்படி நடத்துகிறது... இதை நான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நான் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மகள். இந்தச் சம்பவத்துக்கெல்லம் நான் பயப்படவில்லை, நான் தொடர்ந்து போராடுவேன்” என்றார்.

முன்னதாக காலையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய ஷர்மிளா, “தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தற்போது 6,000 பணியிடங்களை நிரப்புவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஆட்சியானது ஒரு சர்வாதிகாரம் போன்றது. இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாவரும் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான போலீஸார் எங்களைச் சுற்றி வளைத்துள்ளனர்.

எங்களைச் சுற்றிலும் இரும்பு தடுப்புகள் போடப்பட்டு பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டோம். வேலையில்லாதவர்கள் பக்கம் நின்றால், கைது செய்யப்படுகிறார்கள். எங்களைத் தடுக்க நினைக்கும் சர்வாதிகாரி நீங்கள்... உங்கள் செயல்களே இதற்குச் சான்றாகும். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மக்கள் போராட்டம் நடத்துவதை இந்த அரசும், காவல் துறையும் தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE