பாட்னா: “இந்த தேசத்தின் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் ஆபத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் நம்பினால், அவர்கள் சிறிய விஷயங்களைத் தியாகம் செய்து ஒன்றிணைந்து வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்” என்று பிஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டதால் துணை முதல்வர் பதவியை இழந்து மீண்டும் எதிர்க்கட்சி வரிசைக்கு மாறியுள்ள தேஜஸ்வி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். மக்கள் நம்பிக்கை யாத்திரையைத் தொடங்கியுள்ள அவர், அதற்கான காரணம், நிதிஷின் அரசியல், இண்டியா கூட்டணியின் எதிர்காலம் எனப் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அதன் தமிழ் வடிவம்:
ஜன் விஷ்வாஸ் யாத்திரா (மக்கள் நம்பிக்கை யாத்திரை) மேற்கொண்டுள்ளீர்கள். திடீரென இதற்கான அவசியம் என்ன?
“கடந்த 17 மாதங்களாக ஒரு துணை முதல்வராக பிஹார் மக்களுக்கு நான் என்ன செய்தேன் என்பதை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமாரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஒரே ஆட்சிக் காலத்தில் மூன்று முறை முதல்வராகப் பதவியேற்ற அவர் வாக்களித்த மக்களை வஞ்சித்துவிட்டார். பிரதமர் மோடியை எதிர்ப்பேன் என்று கூறிவிட்டு இப்போது அவர் கட்சியுடன் சேர்ந்துவிட்டார். நிதிஷ் குமாருக்கு ஏதேனும் அரசியல் கொள்கை இருக்கிறதா என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஏதும் இருப்பதுபோல் எனக்குத் தெரியவும் இல்லை.”
» வங்கிக் கணக்கில் இருந்து பாஜக பணம் திருடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு @ வருமான வரி விவகாரம்
» “கரும்புக்கான விலை உயர்வு விவசாயிகள் நலனில் அரசின் உறுதியை காட்டுகிறது” - பிரதமர் மோடி
ஆர்ஜேடியுடன் நிதிஷ் குமார் உறவை முறித்துக் கொண்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
“இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல சிறந்த நபர் நிதிஷ் குமாராகத்தான் இருக்க முடியும். நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் அது அவருக்கு வேதனை அளித்தது போல. மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முதலிடத்திலும் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்திலும் வந்ததும் அவருக்கு வருத்தம் கொடுத்திருக்கும். அவர் ஏன் எங்களுடன் கூட்டணி வைத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் ஏன் எங்களுடனான கூட்டணியை முறித்தார் என்பது எனக்குத் தெரியாது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பேன் என்று உறுதியளித்தார். இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவி அவருக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.”
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடிக்கு சவால் ஐக்கிய ஜனதா தளமா அல்லது பாஜகவா?
“பாஜகவுடன் தான் எங்களுக்கு நேரடிப் போட்டி. நிதிஷ் குமார் ஓய்ந்துபோன முதல்வர். ஐக்கிய ஜனதா தளம் அரசியல் ரீதியாக மரித்துப்போன கட்சி.”
ஐக்கிய ஜனதா தளத்துடனான 17 மாத கூட்டணியில் எப்போதாவது நிதிஷ் மகா கூட்டணியை விட்டு வெளியேறுவார் என நினைத்தீர்களா?
“பொது சுகாதாரத் துறையில் 1.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என நான் விரும்பினேன். அதற்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் நிதிஷ் காலம் தாழ்த்தியதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம். 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், இவை எதுவுமே நிதிஷுக்குப் பிடிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.”
ராமர் கோயில் திறப்பு வரும் மக்களவைத் தேர்தலில் பிஹாரில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?
“மக்களவைத் தேர்தலின்போது பிஹார் மட்டுமல்ல, இந்தியாவில் வேறெங்குமே ராமர் கோயில் திறப்பு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தாக்கத்தை ஏற்படுத்தும் உண்மையான பிரச்சினைகளே வேறு. பணவீக்கம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வி, சுகாதார வசதிகள் இன்மை என நிறைய பிரச்சினைகள் இங்கே உள்ளன.”
இண்டியா கூட்டணி குலைந்து போகும் நிலையில் இருக்கிறதே...
“என் தனிப்பட்ட கருத்தின்படி, இந்த தேசத்தின் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் ஆபத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் நம்பினால் அவர்கள் சிறிய விஷயங்களைத் தியாகம் செய்து ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இண்டியா கூட்டணிக் கட்சிகள் வேற்றுமைகளை விட்டொழிக்க வேண்டும்.”
தேஜஸ்வி யாதவ் கடந்த 20-ஆம் தேதி முசாஃபர்பூரில் இருந்து ஜன் விஷ்வாஸ் யாத்திரையைத் தொடங்கினார். பிஹார் முழுவதும் 450 கிமீ அவர் பயணிக்க உள்ளார். மூன்று மாவட்டங்களில் மூன்று பொதுக் கூட்டங்களை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தகது.
நேர்காணல்: அமித் பெலாரி | ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் | தமிழில்: பாரதி ஆனந்த்
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago