வங்கிக் கணக்கில் இருந்து பாஜக பணம் திருடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு @ வருமான வரி விவகாரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து பாரதிய ஜனதா கட்சி பணத்தை திருடியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து வருமான வரித் துறை ரூ.65.89 கோடியை வரி நிலுவையாக பிடித்தம் செய்துள்ளது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் மீது பாஜக அரசு திணித்திருக்கும் நிதி பயங்கரவாதம் இது என்பது தெளிவாக தெரிகிறது. வங்கிகளின் சமீபத்திய தகவல்களின்படி, பாஜக அரசு அவற்றை நிர்பந்தம் செய்து தோராயமாக ரூ.65.89 கோடியை எங்களது வைப்புக் கணக்கில் இருந்து எடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி), இந்திய இளைஞர் காங்கிரஸ் (ஐஒய்சி) மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) கணக்குகளில் இருந்து இந்த தொகை எடுக்கப்பட்டுள்ளன.

பாஜகவைப் போல இல்லாமல் நாங்கள் இந்தத் தொகையை கட்சித் தொண்டர்களிடமிருந்தே பெற்றிருக்கிறோம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடத்திருக்கும் இந்தச் செயலுக்கு என்ன அர்த்தம்? அவர்கள் (பாஜக) வங்கிகளில் இருந்து எங்களது பணத்தைத் திருடுகிறார்கள். நாங்களும் ஆட்சியில் இருந்திருக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக இதுபோன்ற சம்பவங்களைச் சந்தித்தது என்று எதையாவது சுட்டிக்காட்ட முடியுமா?

ஒரு கட்சியாக பாஜக இதுவரை வருமான வரி ஏதாவது செலுத்தியுள்ளதா? இது ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் மதிப்பீடுகள் மீதான தெளிவான தாக்குதல். மேலும் அவர்கள் இந்தியாவில் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். இது சர்வாதிகாரத்துக்கான உதாரணம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரம், வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நான்கு வங்கிக் கணக்குகளை முடக்கியது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதனிடையே, காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி வரி நிலுவைத் தொகையை வருமான வரித் துறை பிடித்தம் செய்திருந்தது.

இது குறித்து காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான் கூறுகையில், "ஜனநாயக விரோதமாக எங்கள் கணக்குகளிலிருந்து ரூ.65 கோடி வருமான வரித் துறை பிடித்தம் செய்துள்ளது. தொண்டர்கள் மூலமும் கட்சி உறுப்பினர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை அது. வருமான வரி துறை அதில் கை வைத்துள்ளது. வரியே செலுத்தாத பாஜகவை வருமான வரி அதிகாரிகள் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.

ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கணக்கு முடக்கப்படுகிறது. மத்திய அமைப்புகளின் இத்தகைய போக்கு இந்தியாவின் ஜனநாயகத்தை அழித்துவிடும். நீதிமன்றம் தலையிட்டு இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE