டெல்லி நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி: ஹரியாணா போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் பேரணியை விவசாயிகள் மீண்டும் தொடங்கினர். அவர்களை கலைக்க ஹரியாணா போலீஸார், துணை ராணுவ படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஓர் இளைஞர் உயிரிழந்தார். மோதலில் 10 போலீஸார், 160 விவசாயிகள் காயம்அடைந்தனர்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சட்டம் இயற்றுவது, கடன் தள்ளுபடி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 13-ம் தேதி தொடங்கினர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கேஎம்எம்) ஆகிய 2 அமைப்புகள் இப்போராட்டத்தை வழிநடத்துகின்றன. இந்த நிலையில், பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் ஹரியாணா எல்லை பகுதியான ஷம்பு மற்றும் கன்னவுரி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக எல்லை பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, மத்திய அரசு சார்பில் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,பருத்தி, சோளம், துவரை, உளுந்து,மசூர் பருப்பு ஆகியவற்றுக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

எனினும், இதை ஏற்க மறுத்த விவசாய சங்கங்கள் 21-ம் தேதி (நேற்று) முதல் டெல்லி நோக்கிய பேரணி தொடரும் என்று அறிவித்தனர். இதையடுத்து, பஞ்சாப் - ஹரியாணா எல்லை பகுதிகளில் ஹரியாணா மாநில போலீஸார், துணை ராணுவ படைகளை சேர்ந்த வீரர்கள் (114 கம்பெனி) குவிக்கப்பட்டனர். பிரதான சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன. போராட்டத்தை கண்காணிக்க ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்தினர். டெல்லியின் பல்வேறு பகுதிகள் மற்றும்பக்கத்து மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லைபகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தடுப்புகளை அகற்றுவதற்காக டிராக்டர் - டிரைலர்கள், புல்டோசர், ஹைட்ராலிக் கிரேன்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுடன் விவசாயிகள் நேற்று காலை 11 மணிக்கு பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஷம்பு மற்றும் கன்னவுரி எல்லை பகுதியில் போராட்டக்காரர்கள், காஸ்மாஸ்க், ஹெல்மெட் உள்ளிட்டவற்றை அணிந்தபடி இரும்பு கம்பிகளுடன் தடுப்புகளை மீற முயன்றனர். அவர்களை கலைப்பதற்காக ஹரியாணா போலீஸார், துணை ராணுவ படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கியால் சுட்டனர். போராட்டக்காரர்களும் கற்களை வீசி தாக்கினர். இதில்,160 விவசாயிகள், 10-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.

தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த சுப்கரன் சிங் என்ற இளைஞரை பட்டியாலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் பலோக் கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

பிரதமர் தலையிட கோரிக்கை: விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சர்வன் சிங் பாந்தர், ஜெக்ஜித் சிங்தல்லேவால் ஆகியோர் பேரணியை தொடங்குவதற்கு முன்புசெய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘டெல்லி போராட்டம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர்7-ம் தேதியே அறிவித்துவிட்டோம். எங்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யாததால்தான் போராட்டத்தை தொடங்கினோம். எங்கள் கோரிக்கையை ஏற்பது குறித்து பிரதமர் மோடி இப்போதாவது அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், டெல்லியை நோக்கிய பேரணி அமைதியான முறையில் மீண்டும் தொடரும்’’ என்றனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘4-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த கோரிக்கை, பயிர் கழிவுகளை எரித்தல், வழக்குகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் 5-வது சுற்றில் பேச அரசுதயாராக உள்ளது. விவசாய தலைவர்கள் அனைவரும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். விவசாயிகள் அமைதியான முறையில் போராட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி நோக்கிய பேரணி 2 நாட்களுக்கு தள்ளிவைக்கப்படுவதாகவும், தர்ணாபோராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்