காங்கிரஸ் வங்கிக் கணக்கில் இருந்து நிலுவைத் தொகை ரூ.65 கோடி பிடித்தம் செய்த வருமான வரித் துறை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து வருமான வரித் துறை நேற்று ரூ.65 கோடியை வரி நிலுவையாக பிடித்தம் செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் “ஜனநாயகத்துக்கு விரோதமாக வருமான வரித் துறை செயல்படுகிறது” என்று விமர்சித்துள்ளது.

கடந்த வாரம், வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நான்கு வங்கிக் கணக்குகளை முடக்கியது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதனிடையே, காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி வரி நிலுவைத் தொகையை வருமான வரித் துறைபிடித்தம் செய்துள்ளது.

45 நாள் தாமதம்: இது குறித்து காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி அதன் 2018-19-ம் ஆண்டுக்கான வரு மான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில் 45 நாட்கள் தாமதம் ஆனது. இதற்காக ரூ.210 கோடி அபராதம் விதித்ததோடு எங்கள் கணக்கை வருமான வரித் துறை கடந்த வாரம் முடக்கியது. வங்கிக் கணக்கில் ரூ.115 கோடி இருப்பு இருக்க வேண்டும் என்றும் அதுபோக மீதுமுள்ள தொகை மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. வருமான வரித் துறையின் முடக்கத்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. தவிர, அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் ஜனநாயக விரோதமாக எங்கள் கணக்குகளிலிருந்து ரூ.65 கோடி வருமான வரித் துறை பிடித்தம் செய்துள்ளது.

தொண்டர்கள் மூலமும் கட்சி உறுப்பினர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை அது. வருமான வரி துறை அதில் கை வைத்துள்ளது. வரியே செலுத்தாத பாஜகவை வருமான வரி அதிகாரிகள் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கணக்கு முடக்கப்படுகிறது. மத்திய அமைப்புகளின் இத்தகைய போக்கு இந்தியாவின் ஜனநாயகத்தை அழித்துவிடும். நீதிமன்றம் தலையிட்டு இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டும். இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE