‘ராஷ்டிரிய ஷோஹசித் சமாஜ்’ - உ.பி.யில் புதிய கட்சி தொடங்கினார் சுவாமி பிரசாத் மவுரியா

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அடிப்படை உறுப்பினர், மற்றும் எம்எல்சி பதவியிலிருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியா புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் தேசிய பொதுச் செயலாளராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா கடந்த பிப்ரவரி 13-ல் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் மீண்டும் பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் உ.பி.யில் ராகுல் காந்தி யாத்திரையில் அவர் கலந்துகொள்வார் எனத் தகவல் வெளியானது.

இச்சூழலில் மவுரியா நேற்று சமாஜ்வாதி அடிப்படை உறுப்பினர், எம்எல்சி பதவியிலிருந்து விலகினார். இதனை மவுரியா நேற்று எக்ஸ் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில், ராஷ்டிரிய ஷோஹசித் சமாஜ் (தேசிய ஒதுக்கப்பட்ட சமூகம்) எனும் பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாகவும் இதன் முதல் கூட்டம் பிப்ரவரி 22-ல் (நாளை) டெல்லி டால்கட்டோரா அரங்கில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இவரது கட்சியின் கொடியில் நீலம், சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் இடம் பெற்றுள்ளன.

தனது ராஜினாமா குறித்து மவுரியா கூறும்போது, “சமாஜ்வாதிக்கு 2016-ல் இருந்த 44 எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை 2022-ல்111 ஆக நான் உயர்த்தினேன். சமாஜ்வாதி வாக்குகளும் 6 சதவீதம் உயர்ந்தது. ஆனால் அகிலேஷ் என்னை அவமதித்து விட்டார். 2017 முதல் சமாஜ்வாதி கட்சி தேசிய அரசியலிலும் ஒன்றுமில்லாமல் போய் விட்டது” என்றார்.

இதனிடையே, மவுரியாவை சமாதானப்படுத்தி சமாஜ்வாதியில் அவரை நீடிக்கச் செய்வதற்கான முயற்சியும் நடைபெற்றது. இதற்காக லக்னோவில் மவுரியாவின் வீட்டுக்குச் சென்ற சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரியிடம், மவுரியா மவுனமாக இருந்து விட்டார். மவுரியா தனது சொந்த நலனுக்காக கட்சியிலிருந்து விலகியிருப்பதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் புகார் கூறியுள்ளார்.

உ.பி.யின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முக்கியத் தலைவராக கருதப்படும் சுவாமி பிரசாத் மவுரியா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்துள்ளார். இக்கட்சி சார்பில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த இவர், 2016-ல் பாஜகவில் சேர்ந்தார். மவுரியாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இடம் கிடைத்தது.

2022-ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிலிருந்து விலகிய அவர், சமாஜ்வாதியில் இணைந்தார். மவுரியாவின் மகளான சங்கமித்ராமவுரியா, பாஜக எம்.பி.யாக உள்ளார். மகன் உத்கிரிஷ்த் மவுரியா இரண்டு முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை. மவுரியா புதிய கட்சி தொடங்கியிருப்பது, சமாஜ்வாதி கட்சியின் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளை பிரிக்கும் வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE