சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின் எதிரொலியாக, சண்டிகர் மேயர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. குறிப்பாக, சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறியிட்டது ஏன் என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது முதன்முறை என்பதால் இந்த வழக்கு தேசிய கவனம் பெற்றது. இந்நிலையில், இன்று (பிப்.20) மீண்டும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை செல்லும் வாக்குகளாகக் கருதி மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணி, அதன் அடிப்படையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முந்தைய முடிவு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி 3 வாரங்களில் விளக்கமளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சை உச்ச நீதிமன்ற தலையீட்டால் முடிவுக்கு வந்தது.

தேர்தல் அதிகாரி குற்றவாளி: இன்றைய வழக்கின் விசாரணையின்போது செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டவை மீண்டும் நீதிபதிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது. அப்போது தேர்தல் அதிகாரி அனில் மசிக்கை குறிப்பிட்ட தலைமை நீதிபதி "மிஸ்டர். மசிக் சேதப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு என்பதால் பேனாவை வைத்து குறியிட்டதாக நேற்று கூறினீர்கள். எங்கே இந்த வாக்குச் சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது?" என்று கேட்டபோது பதில் எதுவும் கூறாத மசிக், வாக்குச்சீட்டை தனது வழக்கறிஞருடன் பார்க்கிறார்.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்டவர்கள், "எந்த வாக்குச்சீட்டுகளும் செல்லாதவை அல்ல. அனில் மசிக் நீதிமன்றத்திலேயே பொய் கூறியுள்ளார். அவர் குற்றவாளி. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர்.

பின்னர் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, "8 வாக்குச்சீட்டிலும் மனுதாரருக்கு (ஆம் ஆத்மி வேட்பாளருக்கு) ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளது தெரிகிறது. ஆனால், வாக்குச்சீட்டை செல்லாததாகக் கருதும் நோக்கத்திற்காக தேர்தல் அதிகாரி, பேனாவால் அதில் அடையாளம் வைத்துள்ளார். இதன் மூலம் தேர்தல் அதிகாரி சட்ட விதிகளை மீறியுள்ளார். மனுதாரருக்கு ஆதரவாக போடப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயற்சித்துள்ளார் என்பது தெளிவாகிறது.

8 வாக்குச் சீட்டுகளும் சிதைக்கப்பட்டதால்தான் பேனாவால் குறியிட்டதாக தேர்தல் அதிகாரி நேற்று நீதிமன்றத்தில் ஆணித்தரமாக அறிக்கை அளித்தார். ஆனால் வாக்குச் சீட்டுகள் எதுவும் சிதைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி. அவர் மீது வழக்குப் பதிய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்