கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 20 இடங்கள் கிடைக்கும்: முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

By இரா.வினோத்


மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும் என மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூருவில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இலவச அரிசி, இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களையும் விரைவில் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளோம். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக கர்நாடகாவின் வளர்ச்சிக்கு தடை போட முயல்கிறது. கர்நாடகாவுக்கு நியாயமாக‌ ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்காமல் வஞ்சிக்கிறது.

இங்குள்ள பாஜகவினருக்கும் ம.ஜ.த.வினருக்கும் கர்நாடகாவின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லை. ஆனால் வரும் மக்களவைத் தேர்தலில் 28 இடங்களிலும் வெல்லப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை கன்னடர்கள் தண்டிக்கப் போகிறார்கள். காங்கிரஸை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற வைத்து ஆசீர்வதிக்கப் போகிறார்கள்.

மக்களின் செல்வாக்கு பெற்ற நிர்வாகிகளுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். உள்ளூர் தலைவர்கள் முன்மொழியும் நபரையே தேசிய தலைமை வேட்பாளராக அறிவிக்கும். கர்நாடகாவில் இப்போது பாஜக மட்டுமே எதிர்க்கட்சியாக இருக்கிறது. ம.ஜ.த.வை பாஜகவுடன் இணைத்துவிட்டார்கள்.

ஒரே எதிரியாக இருப்பதால் காங்கிரஸின் வெற்றி எளிதாகிவிட்டது. தேசிய அளவிலான அரசியல் மாற்றத்துக்கு கர்நாடகாவின் வெற்றி அடித்தளமாக அமையும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE